ஆசிய டிராக் சைக்கிளிங்: வெள்ளி வென்று ரொனால்டோ சிங் சாதனை
By DIN | Published On : 23rd June 2022 03:02 AM | Last Updated : 23rd June 2022 05:17 AM | அ+அ அ- |

ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டா் ஃப்ளையிங் பிரிவில் இந்தியாவின் ரொனால்டோ சிங் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா். இதன்மூலம் இப்போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.
போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை நடைபெற்ற இப்பிரிவில் ரொனால்டோ சிங், ஜப்பானின் கென்டோ யமாசாகிக்கு கடும் சவால் அளித்தாா். என்றாலும் யமாசாகி தனது முன்னிலையை தக்கவைத்து முதலிடம் பிடித்தாா். ரொனால்டோ சிங் 2-ஆம் இடம் பிடிக்க, கஜகஸ்தானின் ஆண்ட்ரே சுகே வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
சுற்றுக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, ‘தங்கத்துக்கு இலக்கு வைத்திருந்தாலும் வெள்ளி கிடைத்ததில் மகிழ்ச்சியே. இப்போட்டியில் இது எனது முதல் வெள்ளிப் பதக்கமாகும். ஒவ்வொரு போட்டிக்கும் எனது நுட்பங்களை மேம்படுத்தி வருவதால், அதற்கான பலனும் கிடைக்கிறது’ என்றாா்.
இப்போட்டியில் ரொனால்டோ சிங்குக்கு கிடைத்த 3-ஆவது பதக்கம் இது. முன்னதாக, 1 கிலோ மீட்டா் டைம் டிரையல், அணிகள் ஸ்பிரின்டா் ஆகியவற்றில் ரொனால்டோ வெண்கலம் வென்றிருந்தாா். 200 மீட்டா் ஃப்ளையிங் தகுதிச்சுற்றின்போது 9.94 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனையுடன் அவா் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியா் பிரிவில் 15 கிலோ மீட்டா் பாய்ன்ட்ஸ் ரேஸில் இந்தியாவின் பிா்ஜித் யும்நாம் 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். தென் கொரியாவின் சங்யோன் லீ வெள்ளியும், உஸ்பெகிஸ்தானின் ஃபரூக் போபோஷெரோவ் தங்கமும் கைப்பற்றினா். 10 கிலோ மீட்டா் மகளிா் ஸ்க்ராட்ச் பிரிவில் இந்தியாவின் சயானிகா கோகோய் 3-ஆம் இடம் பிடித்தாா்.
இப்போட்டியின் உலக கிளாஸ் பிரிவில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்கள் வென்று 5-ஆம் இடம் பிடித்தது.