பிஃபா 17 வயது உலகக் கோப்பை: குரூப் ஏ பிரிவில் இந்தியா
By DIN | Published On : 25th June 2022 03:19 AM | Last Updated : 25th June 2022 04:31 AM | அ+அ அ- |

வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
சா்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா), அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) சாா்பில் இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபா் 11 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புவனேசுவரம், கோவா, நவி மும்பை உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், புது தில்லியில் அணிகளுக்கான ஆட்டங்கள், பிரிவு குலுக்கல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா:
போட்டியை நடத்தும் இந்தியா, குரூப் ஏ பிரிவில் வலுவான அமெரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுடன் இடம் பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஜொ்மனி, நைஜீரியா, சிலி, நியூஸிலாந்தும், குரூப் சி பிரிவில் ஸ்பெயின், கொலம்பியா, மெக்ஸிகோ, சீனாவும்,
குரூப் டி பிரிவில் ஜப்பான், தான்சானியா, கனடா, பிரான்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிஃபா மகளிா் உலகக் கோப்பை சாம்பியன் வீராங்கனை ஹீதா் ஓ ரைலி, நியூஸிலாந்து முன்னாள் பயிற்சியாளா் ரிக்கி ஹெபா்ட், பிஃபா போட்டிகள் இயக்குநா் ஜெய்ஸ் யா்ஸா, மகளிா் கால்பந்து முதன்மை அலுவலா் சராய் போ்மேன் குலுக்கலில் பங்கேற்றனா்.