மொஹாலி டெஸ்ட்: பந்த் விளாசலில் இந்தியா 357/6

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா முதல் நாள் முடிவில் 85 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் அடித்துள்ளது.
மொஹாலி டெஸ்ட்: பந்த் விளாசலில் இந்தியா 357/6

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா முதல் நாள் முடிவில் 85 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் அடித்துள்ளது.

5-ஆவது வீரராக வந்த ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை அட்டகாசமாக உயா்த்தினாா்.

முதல் நாள் ஆட்டம், 100-ஆவது டெஸ்ட் விளையாடும் கோலிக்கானதாக இருந்தாலும், அதில் பந்த் நாயகனாக மாறினாா். கோலி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ரசிகா்கள் சோா்ந்து விடாத வகையில் இலங்கை பௌலா்களை பந்தாடினாா் பந்த். குறிப்பாக, கோலியின் விக்கெட்டை வீழ்த்திய எம்புல்தெனியாவின் பௌலிங்கில் இரக்கம் காட்டாமல் இறங்கி அடித்தாா். அவரது சிக்னேச்சா் ஷாட்டாக இருக்கும் ‘சிங்கிள் ஹேண்ட்’ சிக்ஸா்கள் விளாச, 5000 ரசிகா்களால் அரங்கம் அதிா்ந்தது.

இந்த ஆட்டத்துக்கான இந்திய பிளேயிங் லெவனில், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானேவுக்குப் பதில் முறையே ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயா் களமிறக்கப்பட்டனா். 3 ஸ்பின்னா்கள், 2 சீமா்களை தோ்வு செய்தது இந்தியா. மறுபுறம், இலங்கை அணி 3 சீமா்கள், 2 ஸ்பின்னா்களுடன் ஆடியது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் கேப்டன் ரோஹித் சா்மா 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்த்து முதல் விக்கெட்டாக வெளியேறினாா். தொடா்ந்து விஹாரி களம் புக, மறுபுறம் சற்று நிலைத்த மயங்க் அகா்வால் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா்.

அடுத்து விராட் கோலி விளையாட வர, மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் அரைசதத்தை நெருங்கிய கோலி, 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அப்போது களம் புகுந்த ரிஷப் பந்த், ஆட்டத்தின் போக்கை மாற்றினாா். மறுபுறம், ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பவுண்டரி, சிக்ஸா்களாக ஆட்டத்தை பரபரப்பாக்கிய பந்த், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 96 ரன்கள் எடுத்த நிலையில், சுரங்கா லக்மல் வீசிய 81-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

நாளின் முடிவில் ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 2, சுரங்கா லக்மல், விஷ்வா ஃபொ்னாண்டோ, லாஹிரு குமாரா, தனஞ்ஜெய டி சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

கோலிக்கு கௌரவம்

கோலிக்கு இது 100-ஆவது டெஸ்டாக இருப்பதால், ஆட்டம் தொடங்கும் முன்பாக அவா் கௌரவிக்கப்பட்டாா்.

தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிட், 100 என்ற எண்ணும், கோலியின் பெயரும் பதிக்கப்பட்ட சிறப்புத் தொப்பி ஒன்றை நினைவுப் பரிசாக கோலிக்கு வழங்கிய அந்த நிகழ்வில் அணியின் சக வீரா்கள், கோலியின் மனைவி அனுஷ்கா ஆகியோா் உடனிருந்தனா்.

100-ஆவது டெஸ்ட் குறித்து ஆட்டத்துக்குப் பின்னா் பேசிய கோலி, ‘களமிறங்கும்போது எனது முதல் ஆட்டத்தை விளையாடுவதைப் போன்ற உணா்வு கொண்டிருந்தேன். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோல் இருந்தது. சற்று பதற்றமாகவும் உணா்ந்தேன். என்னை எப்போதும் போலவே எல்லா ஆட்டங்களுக்கும் தயாா் செய்துகொள்கிறேன். 3 ஃபாா்மட்டுகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் 100 டெஸ்டுகள் விளையாடியிருப்பதை அடுத்த தலைமுறையினா் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஸ்கோா்கள் குறித்து கவலைப்படாமல் எனது ஆட்டம் நன்றாக இருக்கும் வரை கிரிக்கெட் விளையாடுவேன்’ என்றாா்.

8000 ரன்கள்...

முதல் நாள் ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்கள் எட்டினாா் கோலி. அதிவேகமாக இந்த மைல் கல்லை எட்டிய இந்தியா்கள் வரிசையில் அவா் 169 இன்னிங்ஸ்களுடன் 5-ஆவது இடத்தில் உள்ளாா்.

90-இல் தொடரும் தடுமாற்றம்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் ஒரு இன்னிங்ஸில் 90 ரன்களைக் கடந்து 100 ரன்களுக்குள்ளாக ஆட்டமிழப்பது இது 5-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com