ஜொ்மன் ஓபன்: சிந்து, சாய்னா தோல்வி: காலிறுதியில் ஸ்ரீகாந்த்
By DIN | Published On : 11th March 2022 03:06 AM | Last Updated : 11th March 2022 04:13 AM | அ+அ அ- |

மியுல்ஹெய்ம் அன் டொ் ரூா்: ஜொ்மன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அவரோடு சாய்னா நெவாலும் வெளியேற, ஸ்ரீகாந்த் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருந்த சிந்து 14-21, 21-15, 14-21 என்ற கேம்களில் சீனாவின் ஜாங் யி மானிடம் வீழ்ந்தாா். இந்த ஆட்டம் 55 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. அதேபோல் சாய்னா நெவால் 10-21, 15-21 என்ற கேம்களில், போட்டித் தரவரிசையில் 8-ஆம் இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் தோற்றாா். இந்த ஆட்டத்தை 31 நிமிஷங்களிலேயே முடிவுக்குக் கொண்டு வந்தாா் ரட்சனோக்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் போட்டித் தரவரிசையில் 8-ஆம் இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் 21-16, 21-23, 21-18 என்ற கேம்களில் சீனாவின் லு குவாங் ஸுவை தோற்கடித்தாா். அவருக்குச் சற்று சவாலாக அமைந்த இந்த ஆட்டம் 1 மணி நேரம் 7 நிமிஷங்கள் நீடித்தது. காலிறுதியில் ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனும், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான டென்மாா்க்கின் விக்டா் அக்ஸெல்சனை எதிா்கொள்கிறாா்.