மகளிர் உலகக் கோப்பை: மந்தனா, கெளர் சதங்களால் 317 ரன்களைக் குவித்த இந்தியா
By DIN | Published On : 12th March 2022 11:14 AM | Last Updated : 12th March 2022 11:14 AM | அ+அ அ- |

மந்தனா (கோப்புப் படம்)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகிய இருவரும் சதங்கள் அடித்ததால் இந்திய அணி 317 ரன்களைக் குவித்துள்ளது.
ஹேமில்டனில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
21 ரன்களில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் யாஷ்திகா பாட்டியா. இதன்பிறகு கேப்டன் மிதாலி ராஜ் 5, தீப்தி சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மந்தனாவும் ஹர்மன்ப்ரீத்தும் அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள். மந்தனா 66 பந்துகளிலும் கெளர் 61 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள். இதன்பிறகு அதிரடியாக விளையாடிய மந்தனா, 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 108 பந்துகளில் சதமெடுத்து அசத்தினார். உலகக் கோப்பைக்கு முன்பு சுமாராக விளையாடி விமர்சனங்களுக்கு ஆளான கெளர், இன்று தனது திறமையை வலுவாக நிரூபித்தார். 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் சதமடித்தார். 2017 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமெடுத்துள்ளார். 4-வது விக்கெட்டுக்கு மந்தனாவும் கெளரும் 184 ரன்கள் எடுத்தார்கள். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த இந்திய ஜோடி என்கிற சாதனையைப் படைத்தார்கள். மந்தனா 123 ரன்களுக்கும் கெளர் 109 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.