முகப்பு விளையாட்டு செய்திகள்
முதல் இன்னிங்ஸில் 880 ரன்கள்: ரஞ்சி கோப்பையில் சாதனை நிகழ்த்திய ஜார்க்கண்ட் அணி
By DIN | Published On : 14th March 2022 11:54 AM | Last Updated : 14th March 2022 11:54 AM | அ+அ அ- |

இரட்டைச் சதமெடுத்த குமார் குஷாக்ரா
ஜார்க்கண்ட் அணி 186 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பேட்டர் மட்டும் அரை சதமடித்தார். அப்போது நாகலாந்து அணி கொஞ்சம் தெம்பாக இருந்திருக்கும். முக்கியமான பேட்டர்கள் காலி, இனி எப்படியும் 300, 350 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் போதும் என அணி வீரர்கள் நினைத்திருப்பார்கள்.
அதற்குப் பிறகு தான் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. நடுவரிசை, கீழ்நடுவரிசை பேட்டர்கள் நம்பமுடியாத அளவுக்கு ரன்கள் எடுத்தார்கள். அவர்களை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை.
நாகலாந்து அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடக்க நிலை காலிறுதி ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி, 203.4 ஓவர்கள் வரைக்கும் விளையாடி 3-வது நாளன்று 880 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விராட் சிங் 107, விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா 266, ஷாபாஸ் நதீம் 177 ரன்கள் எடுத்து தங்களுடைய அணி சாதனை புரிய உதவினார்கள்.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஓர் அணி எடுத்த 4-வது அதிகபட்ச ஸ்கோர் இது.
ரஞ்சி கோப்பை: அதிகபட்ச ஸ்கோர்
ஆந்திராவுக்கு எதிராக ஹைதராபாத் - 944/6 ரன்கள் (1994-ம் வருடம்)
கோவாவுக்கு எதிராக தமிழ்நாடு - 912/6 ரன்கள் (1989)
மைசூருக்கு எதிராக ஹோல்கர் - 912/8 ரன்கள் (1946)
நாகலாந்துக்கு எதிராக ஜார்கண்ட் - 880 ரன்கள் (2022)