உலகக் கோப்பையில் இன்னொரு மோசமான தோல்வி: என்ன ஆச்சு மே.இ. தீவுகள் மகளிர் அணிக்கு?
By DIN | Published On : 15th March 2022 12:00 PM | Last Updated : 15th March 2022 12:00 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலிய அணி (கோப்புப் படம்)
மேற்கிந்தியத் தீவுகள் அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையைத் தொடங்கிய விதம் இதர அணிகளை மிரட்டும் விதத்தில் இருந்தது.
முதல் இரு ஆட்டங்களில் மிகவும் வலுவான அணிகளான நியூசிலாந்து, இங்கிலாந்தை எதிர்கொண்டது. பரபரப்பான முறையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் நூலிழையில் வெற்றி பெற்று அசத்தியது மே.இ. தீவுகள் அணி. இதனால் இந்த உலகக் கோப்பையில் இதர அணிகளுக்குக் கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
3-வது ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதி மோசமாகத் தோற்றது. இந்தியா 317 ரன்கள் குவித்தது. மே.இ. தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இன்று வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. ஆஸ்திரேலிய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் அட்டகாசமாக விளையாடி வருகிறது. அதனால் மே.இ. தீவுகள் அணி, ஆஸி. அணியை எப்படி எதிர்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸி. அணி அற்புதமாக பந்துவீசியதால் மே.இ. தீவுகள் அணி 45.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்டஃபானி டெய்லர் 50 ரன்கள் எடுத்தார். ஆஸி. அணியின் எல்லீஸ் பெர்ரி, கார்ட்னர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 30.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரேச்சல் ஹேய்ன்ஸ் 83 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மகளிர் உலகக் கோப்பையில் 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ஆஸி. அணி. மே.இ. தீவுகள் அணி 4 ஆட்டங்களில் இரு வெற்றிகளுடன் 4 புள்ளிகளைக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.