முகப்பு விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலிய மகளிர் மிரட்டல்: இந்தியாவுக்கு மூன்றாவது தோல்வி
By DIN | Published On : 19th March 2022 02:49 PM | Last Updated : 19th March 2022 02:52 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மகளிர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இன்று (சனிக்கிழமை) விளையாடின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் பேட்டிங் செய்த இந்திய மகளிர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | கௌர், பூஜா அதிரடி ஃபினிஷிங்: ஆஸி.க்கு எதிராக இந்தியா 277 ரன்கள் விளாசல்
278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ரேச்சல் ஹெய்ன்ஸ் மற்றும் அலீசா ஹீலி சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், ஹீலி 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஹெய்ன்ஸும் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, எலைஸ் பெரி நிதானம் காட்ட மெக் லேனிங் ரன் குவிப்பில் ஈடுபட்டார். பெரி 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லேனிங் 97 ரன்களுக்கு வெற்றி அருகாமையில் வந்து ஆட்டமிழந்தார்.
பெத் மூனி ஆஸ்திரேலியா வெற்றியை உறுதி செய்தார். 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளில் நெட் ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.