முகப்பு விளையாட்டு செய்திகள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: வரலாறு படைத்தது வங்கதேசம்
By DIN | Published On : 19th March 2022 11:32 AM | Last Updated : 19th March 2022 11:32 AM | அ+அ அ- |

ஆட்டநாயகன் விருது வென்ற ஷகிப்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த வங்கதேசம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | கௌர், பூஜா அதிரடி ஃபினிஷிங்: ஆஸி.க்கு எதிராக இந்தியா 277 ரன்கள் விளாசல்
அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 77 ரன்களும், லிட்டன் தாஸ் மற்றும் யாசிர் அலி தலா 50 ரன்களும் எடுத்தனர்.
315 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. ரசி வான்டர் டூசன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால் தென் ஆப்பிரிக்க அணி 48.5 ஓவர்களில் 276 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இதன்மூலம், வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஷகிப் வென்றார்.
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இதுவே முதன்முறை.