முகப்பு விளையாட்டு செய்திகள்
கௌர், பூஜா அதிரடி ஃபினிஷிங்: ஆஸி.க்கு எதிராக இந்தியா 277 ரன்கள் விளாசல்
By DIN | Published On : 19th March 2022 10:28 AM | Last Updated : 19th March 2022 10:28 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வர்மா முறையே 10 மற்றும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, யாஸ்திகா பாடியா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.
இதையும் படிக்க | 'முட்டையை அம்மியால் உடைக்க முடியாத அளவுக்கு': எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் ருசிகரப் பேச்சு
தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டி பின்னர் படிப்படியாக அதிரடிக்கு மாறியது இந்த இணை. இருவரும் அரைசதத்தைக் கடக்க இந்திய அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது. 59 ரன்கள் எடுத்து யாஸ்திகா டார்சி பிரௌன் வேகத்தில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் மிதாலி ராஜும் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 8 மற்றும் ஸ்நே ராணா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க இந்திய அணி சரிவைக் கண்டது.
ஆனால், ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் பூஜா வஸ்தராகர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக இந்திய அணிக்குத் தேவையான துரிதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். ஹர்மன்பிரீத் கௌரும் அரைசதத்தைத் தாண்டினார்.
இன்னிங்ஸில் கடைசி பந்தில் பூஜா ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்பிரீத் கௌர் 47 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். பூஜா 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.