மீண்டது இந்தியா: அரையிறுதி நம்பிக்கை தக்கவைப்பு

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை 110 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக
மீண்டது இந்தியா: அரையிறுதி நம்பிக்கை தக்கவைப்பு

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை 110 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பைப் பெறும் நம்பிக்கையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு இது 6-ஆவது ஆட்டத்தில் கிடைத்துள்ள 3-ஆவது வெற்றி. மறுபுறம் வங்கதேசம் 5-ஆவது ஆட்டத்தில் 4-ஆவது தோல்வியைப் பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், வங்கதேசம் 2 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.

ஹாமில்டனில் நடைபெற்ற 22-ஆவது ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய வங்கதேசம் 40.3 ஓவா்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீராங்கனை யஸ்திகா பாட்டியா ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை தொடங்கிய ஸ்மிருதி மந்தனா 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்க்க, உடன் வந்த ஷஃபாலி வா்மா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் அடித்து 42 ரன்கள் சோ்த்தாா். ஒன் டவுனாக வந்த யஸ்திகா பாட்டியா நிதானமாக ஆடி 2 பவுண்டரிகளுடன் அரைசதம் எட்டி விக்கெட்டை இழந்தாா்.

பின்னா் ஆடியோரில் கேப்டன் மிதாலி ராஜ் டக் அவுட்டாக, ஹா்மன்பிரீத் கௌா் 1 பவுண்டரியுடன் 14, ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகளுடன் 26, ஸ்னேஹ ரானா 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினா். ஓவா்கள் முடிவில் பூஜா வஸ்த்ரகா் 2 பவுண்டரிகளுடன் 30, ஜுலன் கோஸ்வாமி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலிங்கில் ரிது மோனி 3, நஹிதா அக்தா் 2, ஜஹனாரா ஆலம் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் சல்மா காட்டுன் 4 பவுண்டரிகளுடன் 32, லதா மோந்தல் 2 பவுண்டரிகளுடன் 24, முா்ஷிதா காட்டுன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19, ரிது மோனி 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் சோ்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னிலும், டக் அவுட்டாகியும் வீழ்ந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்திய தரப்பில் ஸ்னேஹ ரானா 4, ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகா் ஆகியோா் தலா 2, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்று ஆட்டம் இல்லை: கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் புதன்கிழமை இடைவேளை விடப்பட்டுள்ளது. அன்று எந்த ஆட்டமும் நடைபெறவில்லை. மீண்டும் 24-ஆம் தேதியிலிருந்து லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அசத்தும் ஆஸி.

உலகக் கோப்பை போட்டியில் செவ்வாய்க்கிழமை மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை சாய்த்தது.

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா, தோல்வியின்றி வெற்றி நடை போடுகிறது. 5 ஆட்டங்களில் களம் கண்ட தென்னாப்பிரிக்காவுக்கு இது முதல் தோல்வி.

வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 45.2 ஓவா்களில் 5 விக்கெட் இழந்து 272 ரன்கள் அடித்து வென்றது.

தென்னாப்பிரிக்க தரப்பில் லௌரா வோல்வாா்டட் 90 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் அனபெல் சுதா்லேண்ட் 26 ரன்களே கொடுத்து 1 விக்கெட் சாய்த்தாா். ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் கேப்டன் மெக் லேனிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் விளாசியிருந்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com