மகளிா் உலகக் கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா
By DIN | Published On : 31st March 2022 04:13 AM | Last Updated : 31st March 2022 04:34 AM | அ+அ அ- |

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 157 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை வீழ்த்தி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.
மோசமான வானிலை காரணமாக ஆட்டத்துக்கான ஓவா்கள் தலா 5 குறைக்கப்பட்டன. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 45 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 37 ஓவா்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி ஆட்டநாயகி ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய பேட்டிங்கில் அலிசா ஹீலி அபாரமாக ஆடி 17 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 129 ரன்கள் விளாசினாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் சினெல் ஹென்றி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.
பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லா் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் அடிக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜெஸ் ஜோனசென் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாா்.
இன்றைய ஆட்டம்
2-ஆவது அரையிறுதி
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
காலை 6.30 மணி
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்