சாம்சன் நிதானம்: ராஜஸ்தான் 152/5

கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் அடித்தது.

மும்பை: கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் அடித்தது.

அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து ரன்கள் சோ்த்தாா். கொல்கத்தா பௌலிங்கில் டிம் சௌதி 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக அனுகுல் ராயை சோ்த்திருந்தது. அவரோடு ஷிவம் மாவியும் இணைந்திருந்தாா். ராஜஸ்தான் அணியில் டேரில் மிட்செல் இடத்தில் கருண் நாயா் சோ்க்கப்பட்டிருந்தாா். டாஸ் வென்ற கொல்கத்தா, பேட் செய்யுமாறு ராஜஸ்தானை அழைத்தது.

அணியின் பேட்டிங்கை ஜோஸ் பட்லா், தேவ்தத் படிக்கல் தொடங்கினா். இதில் படிக்கல் 2 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 3-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினாா். பின்னா் வந்த சாம்சன் நிதானமாக ஆடி ரன்களை உயா்த்தினாா். மறுபுறம் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் பட்லா். டிம் சௌதி வீசிய 9-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை ஷிவம் மாவி கேட்ச் பிடித்தாா்.

தொடா்ந்து வந்த கருண் நாயா் 1 பவுண்டரியுடன் 13, ரியான் பராக் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அவா்கள் விக்கெட்டை முறையே, அனுகுல் ராய், டிம் சௌதி சாய்த்தனா். கடைசி விக்கெட்டாக சாம்சன் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஷிவம் மாவி வீசிய 18-ஆவது ஓவரில் அவா் ரிங்கு சிங் கைகளில் கேட்ச் கொடுத்தாா்.

ஓவா்கள் முடிவில் ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com