ஜூனியா் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்
By DIN | Published On : 04th May 2022 02:45 AM | Last Updated : 04th May 2022 02:45 AM | அ+அ அ- |

ஜூனியா் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் 2-ஆம் நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
கிரீஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை, மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ், வி.ரிதிகா ஆகியோா் களம் கண்டனா். இதில் ஞானேஸ்வரி ஸ்னாட்ச் பிரிவில் 73 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 83 கிலோ என மொத்தமாக 156 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். ரிதிகா தனது முயற்சியில் ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 81 கிலோ என 150 கிலோ எடையுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், இந்தோனேசியாவைச் சோ்ந்தவருமான விண்டி கன்டிகா அய்சா மொத்தமாக 183 கிலோ (83+102) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். வழக்கமாக இந்தப் பிரிவில் சவால் அளிக்கும் சீனா, வடகொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் இம்முறை பங்கேற்கவில்லை.
முன்னதாக, இப்போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை மகளிருக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹா்ஷதா சரத் தங்கம் வென்று சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.