11-ம் வகுப்புத் தேர்வுகளுடன் செஸ் போட்டியில் சாதிக்கும் பிரக்ஞானந்தா

இப்போது தூங்கினால்தான் தேர்வின்போது என்னால் தூங்காமல் இருக்க முடியும்.
11-ம் வகுப்புத் தேர்வுகளுடன் செஸ் போட்டியில் சாதிக்கும் பிரக்ஞானந்தா

இணையம் வழியாக நடைபெறும் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. 

கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8-வது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார் பிரக்ஞானந்தா. தற்போது நடைபெற்று வரும் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலும் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார். பிறகு இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.

அரையிறுதியில் நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியைத் தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா. 4 ஆட்டங்களின் முடிவில் 2-2 என இருந்த நிலையில் டை பிரேக்கரில் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா தோற்கடித்தார். இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதோடு நவம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டியிலும் தனக்கான இடத்தை அவர் உறுதி செய்துள்ளார். மற்றொரு அரையிறுதியில் உலக சாம்பியன் கார்லனை சீனாவைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரர் டிங் லிரின் தோற்கடித்தார். இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தாவுடன் சீன வீரர் மோதவுள்ளார்.

11-வது படித்து வரும் பிரக்ஞானந்தா தற்போது தேர்வுக்காகத் தயாராகி வருகிறார். அதிகாலை 2 மணிக்கு அரையிறுதி ஆட்டம் முடிந்த பிறகு அவர் பேட்டியளித்ததாவது: நான் காலை 8.45க்குப் பள்ளியில் இருக்கவேண்டும். இப்போது தூங்கினால்தான் தேர்வின்போது என்னால் தூங்காமல் இருக்க முடியும். இது இறுதித் தேர்வு. கட்டாயமாக எழுத வேண்டும். வணிகவியல் பாடம். நான் தேர்ச்சியடைந்து விடுவேன் என நினைக்கிறேன். செஸ் ஆட்டம், தேர்வு என இரண்டிலும் நான் வெற்றி பெற்றால் நல்லதுதான். அதேசமயம் தேர்வில் வெற்றி பெறுவதை விடவும் செஸ் போட்டியில் வெல்வது இன்னும் நன்றாக இருக்கும் என்றார். இறுதிச்சுற்று ஆட்டம் இன்றிரவு இந்திய நேரம் 9.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com