ஆசிய கோப்பை ஹாக்கி: அட்டகாசமாக முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வென்று, நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது. 
ஆசிய கோப்பை ஹாக்கி: அட்டகாசமாக முன்னேறிய இந்தியா


ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வென்று, நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது. 

மறுபுறம், பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறியதுடன், உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஆசிய கோப்பை நடப்புச் சாம்பியனாக இருக்கும் இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்தது. பின்னர் ஜப்பானிடம் தோல்வியைச் சந்தித்த இந்தியாவுக்கு, நாக் அவுட் சுற்று வாய்ப்பு மங்கியது. இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று, ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு நாக் அவுட் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 

இந்நிலையில், இந்தோனேசியாவுக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் அதிரடி காட்டிய இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அத்துடன் பாகிஸ்தானும் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது. இதையடுத்து குரூப் "ஏ'-வில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே 4 புள்ளிகளுடன் சுற்றை நிறைவு செய்திருந்தன. என்றாலும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. 

இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்காக திப்சன் திர்கி 4 கோல்களும் (41', 46', 58', 58'), சுதேவ் பெலிமகா 3 கோல்களும் (44', 45', 54') அடித்து அசத்தினர். அவர்கள் தவிர தமிழக வீரர் கார்த்தி செல்வம் (39', 55'), பவன் ராஜ்பர் (9', 10'), சுனில் செளமர்பெட் (18', 23'), உத்தம் சிங் (13'), சஞ்சீப் ஜெஸ் (19'), வீரேந்திர லக்ரா (40') ஆகியோரும் ஸ்கோர் செய்து அணியின் வெற்றிக்கு பங்களித்தனர். 

அடுத்ததாக இந்தியா, சூப்பர் 4 ஆட்டத்தில் ஜப்பானை சனிக்கிழமை சந்திக்கிறது. 

இதர ஆட்டங்கள்: வியாழக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் ஜப்பான் - பாகிஸ்தானையும் (3-2), மலேசியா - வங்கதேசத்தையும் (8-1), தென் கொரியா - ஓமனையும் (5-1) வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com