சுவாரசியமாகும் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 
சுவாரசியமாகும் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். இதனால் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் கிடைத்தது. 10 ஓவர்களின் முடிவில் 77 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டது இங்கிலாந்து. 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஹேல்ஸ். 13-வது ஓவரிலிருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார் பட்லர். 35 பந்துகளில் அரை சதமெடுத்தார். மொயீன் அலி 5 ரன்களிலும் லிவிங்ஸ்டன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 19-வது ஓவரில் புரூக் 7 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 73 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து இன்னிங்ஸில் 2-வது ஓவரில் கான்வேயின் விக்கெட்டை 3 ரன்களில் வீழ்த்தினார் வோக்ஸ். ஃபின் ஆலன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. கேன் வில்லியம்சனும் கிளென் பிளிப்ஸும் இதன்பிறகு நல்ல கூட்டணியை அமைத்தார்கள். ரஷித் வீசிய 14-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்தார் பிளிப்ஸ். அவர் 25 பந்துகளில் அரை சதமெடுத்தார். கடந்த ஆட்டத்தில் சதமடித்ததால் பிளிப்ஸ் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள் நியூசிலாந்து ரசிகர்கள். 40 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 3-வது விக்கெட்டுக்கு 59 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்கள் இருவரும். இதன்பிறகு ஆட்டம் வேறு திசையில் சென்றது. விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்ததால் இலக்கை நெருங்க முடியாமல் தடுமாறியது நியூசிலாந்து. ஜேம்ஸ் நீஸம் 6 ரன்களிலும் டேரில் மிட்செல் 3 ரன்களிலும் பிளிப்ஸ் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 4 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்துக்குத் தோல்வி உறுதியானது. கடைசியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது நியூசிலாந்து. 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. நியூசிலாந்து 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 5 புள்ளிகள், இலங்கை 4 புள்ளிகளுடன் உள்ளதால் குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டங்கள் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com