பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றார். 

இந்திய அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 64, ராகுல் 50 ரன்கள் எடுத்தார்கள். 

வங்கதேச அணி பவர்பிளேயில் அற்புதமாக விளையாடியது. லிடன் தாஸ் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். 21 பந்துகளில் அரை சதமெடுத்து அசத்தினார். பவர்பிளேயில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடித்தார் லிடன் தாஸ். இதனால் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது வங்கதேசம். 

மழை காரணமாக 7-வது ஓவரின் முடிவில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்கதேச அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றபிறகு வங்கதேச அணிக்குப் புதிய இலக்கு அளிக்கப்பட்டது. 16 ஓவர்களில் 151 ரன்கள். அதாவது மீதமுள்ள 9 ஓவர்களில் 85 ரன்கள் எடுக்க வேண்டும். 

ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகு அஸ்வின் வீசிய ஓவரில் 2-வது பந்திலேயே ரன் அவுட் ஆனார் லிடன் தாஸ். அவர் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அவருடைய விக்கெட் தான் இந்தியாவின் வெற்றிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நஜ்முல் ஹுசைன், ஷமி பந்தில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அஃபிப் ஹுசைனை 3 ரன்களுக்கு வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அதே ஓவரில் ஷகிப் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார் அர்ஷ்தீப் சிங். 

கடைசி 4 ஓவர்களில் வங்கதேச அணிக்கு 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 50 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. 13-வது ஓவரில் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. ஒரு சிக்ஸும் ஒரு பவுண்டரியும் அடித்து 14 ரன்கள் மட்டும் எடுத்ததால் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தது வங்கதேச அணி. அந்த அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. நுருல் 25 ரன்களும் டஸ்கின் அஹமது 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி டி/எல் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com