குரூப் 2 அரையிறுதி வாய்ப்பு: ஓா் அலசல்!

கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தாலோ, அல்லது மழை உள்ளிட்ட காரணங்களால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
குரூப் 2 அரையிறுதி வாய்ப்பு: ஓா் அலசல்!

இந்தியா:

கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தாலோ, அல்லது மழை உள்ளிட்ட காரணங்களால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஏனெனில், இதில் எது நடந்தாலும் முறையே இந்தியாவுக்கு 8 அல்லது 7 புள்ளிகள் கிடைத்துவிடும். அந்தப் புள்ளிகளை பாகிஸ்தானோ, வங்கதேசமோ எட்ட வாய்ப்பு இல்லை.

ஆனால் இந்தியா அந்த ஆட்டத்தில் தோற்று, பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வென்று, தென்னாப்பிரிக்கா தனது கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தை வீழ்த்தினால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். புள்ளிகள் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவும், ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

தென்னாப்பிரிக்கா:

பாகிஸ்தானிடம் தோற்ற தென்னாப்பிரிக்கா, நல்லதொரு ரன் ரேட்டுடன் இருப்பதால் தப்பிக்கிறது. கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதிலும் அந்த அணி தோற்கும் பட்சத்தில், வங்கதேசம் - பாகிஸ்தான் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் மட்டும் பெற்றால்தான் தென்னாப்பிரிக்காவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

வங்கதேசம்:

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்த அணி கட்டாயம் வெல்ல வேண்டும். இதுபோக, நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோற்றாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு அந்த அணிக்கு 1 புள்ளி கிடைத்தாலோ, வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பு பெறும்.

தென்னாப்பிரிக்கா தோற்றால் புள்ளிகள் அடிப்படையில் வங்கதேசத்துக்கு வாய்ப்பு கிடைக்கும். தென்னாப்பிரிக்கா 1 புள்ளி பெற்றால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சமநிலைக்கு வரும். அப்போது, அதிக வெற்றி கணக்கு அடிப்படையில் வங்கதேசத்துக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் (அணிகளின் புள்ளிகள் சமமாக இருந்தால், நெட் ரன் ரேட்டுக்குப் பதிலாக முதலில் வெற்றியின் எண்ணிக்கையே கணக்கில் கொள்ளப்படும்).

ஒருவேளை, தென்னாப்பிரிக்கா கடைசி ஆட்டத்தில் வென்றால் ஏறத்தாழ வெளியேறும் நிலைக்கு வரும் வங்கதேசம். அப்போதும், வங்கதேசம் பாகிஸ்தானையும், ஜிம்பாப்வே இந்தியாவையும் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் ஆச்சா்யம் நிகழ்ந்தால் வங்கதேசத்துக்கு வாழ்வு கிடைக்கும்.

பாகிஸ்தான்:

கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அத்துடன் நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு 1 புள்ளி மட்டும் கிடைக்க வேண்டும். அந்த நிலை வந்தால், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா தலா 6 புள்ளிகளுடன் சமனில் இருக்க, வெற்றிகள் கணக்கின் அடிப்படையில் இந்தியாவுடன் அரையிறுதிக்கு முன்னேறும் பாகிஸ்தான்.

அதேபோல், அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால், ஜிம்பாப்வேயுடன் இந்தியா குறைந்தது 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஜிம்பாப்வே:

இந்த அணி கடைசி ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆட்டம் கைவிடப்பட்டு, தென்னாப்பிரிக்கா நெதா்லாந்திடம் தோற்றால், ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

ஜிம்பாப்வே மோசமான ரன் ரேட்டுடன் இருப்பதால், அந்த அணி இந்தியாவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவதுடன், தென்னாப்பிரிக்கா 47 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்திடம் தோற்க வேண்டும். இதெல்லாம் நிகழ்ந்தால் அந்த அணி அரையிறுதிக்கு வரும். நெதா்லாந்துக்கு எந்த விதத்திலும் அரையிறுதி வாய்ப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com