நியூசிலாந்துக்கு ராகுல் டிராவிட் செல்லாதது ஏன்?: அஸ்வின் விளக்கம்

நியூசிலாந்துக்கு இந்திய அணியினருடன் ராகுல் டிராவிட் செல்லாதது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு ராகுல் டிராவிட் செல்லாதது ஏன்?: அஸ்வின் விளக்கம்

நியூசிலாந்துக்கு இந்திய அணியினருடன் ராகுல் டிராவிட் செல்லாதது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றிலிருந்து (நவம்பர் 18) தொடங்கிய டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உலகக் கோப்பைக்குப் பிறகு வங்கதேசம் சுற்றுப்பயணம் வரை ஓய்வு எடுத்துக்கொள்வதால் இந்தச் சுற்றுப்பயணத்தில் விவிஎஸ் லக்‌ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராகச் செயல்படுகிறார். இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்தார். இதுபோன்ற ஓய்வுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய அணி குறித்து நான் தெரிந்துகொள்ள வேண்டும். அணியை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஐபிஎல் போட்டியால் இரண்டு, மாதங்கள் ஓய்வு கிடைக்கின்றன. அதுவே போதும் என்றார்.

இந்நிலையில் ராகுல் டிராவிடுக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியுள்ளார். தனது யூடியூப் தளத்தில் அவர் பேசியதாவது: 

நியூசிலாந்துக்கு எதற்காக லக்‌ஷ்மண் வேறு பயிற்சியாளர் குழுவுடன் சென்றிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். இதற்கான கண்ணோட்டத்தைக்கூட நம் ஊரில் சரியாகச் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக டிராவிட் குழுவினர் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருந்தார்கள். அணிக்குள் இருந்து அருகில் பார்த்ததால் சொல்கிறேன். கிட்டத்தட்ட தூங்காமல் இந்த மைதானத்துக்கு இந்தத் திட்டம், இந்த எதிரணிக்கு இந்தத் திட்டம் எனப் பணியாற்றினார்கள். மனத்தளவில் மட்டுமல்ல, உடலளவிலும் சோர்ந்து போயிருப்பார்கள். எனவே எல்லோருக்கும் ஓய்வு தேவை. 2 வாரம் ஓய்வெடுத்துவிட்டு நியூசிலாந்து தொடர்கள் முடிந்தவுடன் உடனடியாகத் தொடங்கும் வங்கதேசத் தொடர்களில் அணியினருடன் அவர்கள் இணைந்து கொள்வார்கள். அதனால் தான் நியூசிலாந்துக்கு லக்‌ஷ்மணுடன் புதிய பயிற்சியாளர் குழு சென்றுள்ளது. இது எதைக் காண்பிக்கிறது என்றால், பயிற்சியாளர் அளவிலும் இந்தியாவில் நிறைய திறமைசாலிகள் உள்ளார்கள், அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதுதான் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com