கோலி சரவெடி; பாண்டியா அதிரடி

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி கண்டது. 
கோலி சரவெடி; பாண்டியா அதிரடி

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி கண்டது. 

இதன் மூலம் கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. 

90,293 ரசிகர்கள் கூடியிருந்த மெல்போர்ன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. அடுத்து இந்தியா அதே ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்களை எட்டி பரபரப்பாக கடைசி பந்தில் வெற்றியைப் பதிவு செய்தது. 

சேஸிங்கில் விராட் கோலி தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து அட்டகாசமான இன்னிங்ஸை பதிவு செய்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அவரோடு துணை நின்ற பாண்டியா, பேட்டிங், பெüலிங் என இரண்டிலுமே அசத்தினார். 

பிளேயிங் லெவன்:  இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே 3 பேசர்கள், 2 ஸ்பின்னர்களை களமிறக்கியிருந்தன. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் களம் புகுந்தனர். 

சரிந்த விக்கெட்டுகள்:  டாஸ் வென்ற இந்தியா சேஸிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் பேட்டர்களின் வரிசையை இந்திய பௌலர்கள் தகுந்த இடைவெளியில் அடுத்தடுத்து சரித்தனர். 15 ரன்களுக்குள்ளாகவே முக்கிய விக்கெட்டுகளான முகமது ரிஸ்வான் (4), கேப்டன் பாபர் ஆஸமை (0) வெளியேற்றினார் அர்ஷ்தீப் சிங். 

3-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷான் மசூத், இஃப்திகர் அகமது கூட்டணி பாகிஸ்தான் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அகமது 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில், ஷமி வீசிய 13-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். 

பின்னர் வந்த ஷாதாப் கான் 5, ஹைதர் அலி 2, முகமது நவாஸ் 9, ஆசிஃப் அலி 2, ஷாஹீன் அஃப்ரிதி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஓவர்கள் முடிவில் மசூத் 5 பவுண்டரிகளுடன் 52, ஹாரிஸ் ரெளஃப் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பெளலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

கோலி மிரட்டல் அடி: பின்னர் 160 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தனர். ஒன் டவுனாக வந்த விராட் கோலி தொடக்கத்தில் நிதானம் காட்டினார். 

மறுபுறம், முக்கிய விக்கெட்டான சூர்யகுமார் யாதவ் 15 ரன்களுக்கும், அடுத்து வந்த அக்ஸர் படேல் 2 ரன்களுக்கு வெளியேற, 31 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அப்போது வந்த ஹார்திக் பாண்டியா, கோலியுடன் இணைய, ஆட்டத்தின் போக்கு மாறியது. 

5-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது இந்த அதிரடி கூட்டணியில் பாண்டியா சற்று நிதானம் காட்ட, கோலி பாகிஸ்தான் பெüலிங்கை சிதறடித்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையிருந்தபோது பாண்டியா 40 ரன்களுக்கு (1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) பெவிலியன் திரும்ப இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்தனர். அதே ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட்டை இழக்க, ஆட்டம் பரபரப்பானது.

அப்போது கோலி விளாசிய சிக்ஸரால் ரன் தேவை குறைந்தது. இறுதியாக வெற்றிக்குத் தேவைப்பட்ட 1 ரன்னை அஸ்வின் அடித்தார். முடிவில் கோலி 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்களுடன் அவரோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பெளலிங்கில் முகமது நவாஸ், ஹாரிஸ் ரெüஃப் ஆகியோர் தலா 2, நசீம் ஷா 1 விக்கெட் கைப்பற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com