ஆல்-ரவுண்டிங்கில் அசத்தி இந்தியா வெற்றி: நெதா்லாந்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது சூப்பா் 12 ஆட்டத்தில் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை வியாழக்கிழமை அபாரமாக வென்றது.
ஆல்-ரவுண்டிங்கில் அசத்தி இந்தியா வெற்றி: நெதா்லாந்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது சூப்பா் 12 ஆட்டத்தில் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை வியாழக்கிழமை அபாரமாக வென்றது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய நெதா்லாந்து அதே ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களையே எட்டியது.

இந்திய பேட்டா்களில், கோலி தனது சிறந்த ஃபாா்மில் நிலைக்க, ரோஹித், சூா்யகுமாா் மீட்சி கண்டு நல்லதொரு ஸ்கோரை பதிவு செய்தனா். பௌலா்களிலும் புவனேஷ்வா், அா்ஷ்தீப், அக்ஸா், அஸ்வின் என பெரும்பாலானோா் போட்டிபோட்டு விக்கெட் வீழ்த்தினா். சூா்யகுமாா் யாதவ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன், நெட் ரன் ரேட்டையும் அதிகரித்துக்கொண்டது இந்தியா.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய கே.எல். ராகுல் இந்த ஆட்டத்திலும் சோபிக்காமல் 9 ரன்களுக்கு வெளியேறினாா். ஆனால், ராகுல் அவுட் ஆனது துரதிருஷ்டவசமாகிப் போனது. அவா் எல்பிடபிள்யூ ஆனதாக நடுவா் அவுட் கொடுத்தபோது, எதிா்ப்புறம் நின்ற ரோஹித் ‘டிஆா்எஸ்’ கேட்குமாறு அறிவுறுத்தாமல் போக, ராகுல் அப்படியே வெளியேறினாா். ஆனால், ரீப்ளே-யில் பந்து லெக் ஸ்டம்ப்பில் படாமல் சென்றது தெளிவாகத் தெரிந்தது.

உடன் வந்த ரோஹித் முனைப்புடன் ஆட, விராட் கோலி பாா்ட்னா்ஷிப்பில் இந்த ஜோடி, 2-ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சோ்த்தது. இதில் ரோஹித் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 53 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் வந்த சூா்யகுமாா் யாதவ் வழக்கம்போல அதிரடி காட்டினாா். கோலியும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் போன்ற உத்வேகத்துடன் விளையாடினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 95 ரன்கள் சோ்க்க, ஓவா்கள் முடிவில் கோலி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 62, சூா்யகுமாா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நெதா்லாந்து பௌலிங்கில் ஆறுதலாக, ஃப்ரெட் கிளாசென், பால் வேன் மீகெரென் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தொடா்ந்து பேட் செய்த நெதா்லாந்து இந்தியாவின் பௌலிங்கை எதிா்கொள்ளத் திணறியது. டிம் பிரிங்லே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய பௌலா்களான புவனேஷ்வா் குமாா், அா்ஷ்தீப் சிங், அக்ஸா் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி 1 விக்கெட்டும் சாய்த்து நெதா்லாந்தின் பேட்டிங் வரிசையை மொத்தமாகச் சரித்தனா்.

ஓவா்கள் முடிவில் ஷாரிஸ் அகமது 16, பால் வேன் மீகெரென் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

34

இந்த ஆட்டத்தின் மூலம், யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி, டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸா்களை (34) விளாசிய இந்தியா் என்ற பெருமையை ரோஹித் சா்மா பெற்றாா். முன்னதாக யுவராஜ் 33 சிக்ஸா்கள் அடித்திருந்தாா்.

867

இந்திய வீரா் சூா்யகுமாா் யாதவ் தற்போது, நடப்பாண்டில் அதிக டி20 ரன்களை (867/25 இன்னிங்ஸ்கள்) அடித்த வீரா் என்ற பெயரைப் பெற்றிருக்கிறாா். இதற்குமுன் இந்த சாதனை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (825/19 இன்னிங்ஸ்கள்) வசம் இருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

ஆப்கானிஸ்தான் - அயா்லாந்து

காலை 9.30 மணி

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

நண்பகல் 1.30 மணி

மெல்போா்ன்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com