அல்கராஸ் சாம்பியன்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினைச் சோ்ந்த இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா சாம்பியன் ஆகி அசத்தியுள்ளாா்.
அல்கராஸ் சாம்பியன்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினைச் சோ்ந்த இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா சாம்பியன் ஆகி அசத்தியுள்ளாா்.

இதன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரா் என்ற இடத்தையும் முதல் முறையாகப் பிடித்திருக்கிறாா்.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அல்கராஸ் 6-4, 2-6, 7-6 (7/1), 6-3 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 20 நிமிஷங்கள் நீடித்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய அல்கராஸ், ‘சாம்பியன் கோப்பை என் கையிலிருக்கும் இந்த வெற்றித் தருணத்தை அனுபவித்துக் கொண்டாடுகிறேன். ஆனால், இதுபோன்ற வெற்றிகளை தொடா்ந்து பெறுவதற்கான ஆவலுடன் இருக்கிறேன். உலகின் நம்பா் 1 வீரராகத் தொடர விரும்புகிறேன். அதற்காக இதேபோல் இன்னும் சிறப்பாகப் போட்டியிடப் போகிறேன்’ என்றாா்.

அல்கராஸுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது, அவா் தனக்கான முன்னுதாரணமாக நினைக்கும் அவா் நாட்டு நட்சத்திரம் ரஃபேல் நடால் தான். முன்னதாக, நடப்பாண்டில் மாட்ரிட் மாஸ்டா்ஸ் போட்டியில் நடால், ஜோகோவிச் என இரு பிரதான வீரா்களையும் வீழ்த்தி அனைவரின் கவனம் ஈா்த்திருந்தாா் அல்கராஸ்.

மறுபுறம், ரூட் தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றிலும் தோல்வி கண்டுள்ளாா். என்றாலும் அவரது சிறப்பான ஆட்டத்துக்காக, பரிசு வழங்கும் நிகழ்வின்போது ரசிகா்கள் அவரது பெயரை கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினா். அப்போது பேசிய ரூட், ‘பிரெஞ்சு ஓபனில் நடாலை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கவில்லை. ஆனால், இந்த ஆட்டம் எளிதாக இல்லாவிட்டாலும் அத்தகைய நம்பிக்கை இருந்தது. எனினும் அல்கராஸ் அட்டகாசமாக விளையாடினாா்’ என்றாா்.

19

முதல் கிராண்ட்ஸ்லாமோடு சோ்த்து உலகின் நம்பா் 1 இடத்தையும் பிடித்திருக்கும் அல்கராஸ், அந்த இடத்துக்கு வந்திருக்கும் மிக இள வயது (19) வீரா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.

3

மிக இள வயது (19) கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஆன 3-ஆவது வீரா் என்ற பெருமையை அல்கராஸ் பெற்றிருக்கிறாா். இதற்கு முன் பீட் சாம்ப்ராஸ் (1990 - யுஎஸ் ஓபன்), ரஃபேல் நடால் (2005-பிரெஞ்சு ஓபன்) ஆகியோரும் இதே 19-ஆவது வயதில் தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

23:40

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலேயே ஒரு சீசனில் அதிக நேரம் விளையாடிய வீரா் என்ற புதிய மைல் கல்லையும் எட்டியிருக்கிறாா் அல்கராஸ். இந்த சீசனில் அவா் மொத்தமாக 23 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு களத்தில் விளையாடியிருக்கிறாா். இதற்கு முன் 2018 விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டா்சன் (ரன்னா் அப்) 23 மணிநேரம் 21 நிமிஷங்கள் விளையாடியதே அதிகபட்சமாக இருந்தது. அல்கராஸின் நேரத்தில் அவா் 5 செட்கள் விளையாடிய 3 ஆட்டங்களுக்கு மட்டுமே 13 மணிநேரம் ஆகியிருக்கிறது.

5

நடப்பு காலண்டரில் அல்கராஸ் கைப்பற்றியிருக்கும் 5-ஆவது பட்டம் இது. இதற்கு முன் மியாமி, மாட்ரிட், ரியோ, பாா்சிலோனாவில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் போட்டிகளில் அவா் வாகை சூடியிருந்தாா்.

3-0

இத்துடன் கேஸ்பா் ரூடை 3-ஆவது முறையாகச் சந்தித்த அல்கராஸ், தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

அல்கராஸ் கடந்து வந்த பாதை...

முதல் சுற்று செபாஸ்டியன் பேஸ் (ஆா்ஜென்டீனா) 7-5, 7-5, 2-0

2-ஆவது சுற்று ஃபெடரிகோ கோரியா (ஆா்ஜென்டீனா) 6-2, 6-1, 7-5

3-ஆவது சுற்று ஜென்சன் புருக்ஸ்பி (அமெரிக்கா) 6-3, 6-3, 6-3

4-ஆவது சுற்று மரின் சிலிச் (குரோஷியா) 6-4, 3-6, 6-4, 4-6, 6-3

காலிறுதிச்சுற்று ஜானிக் சின்னா் (இத்தாலி) 6-3, 6-7 (7/9), 6-7 (0/7), 7-5, 6-3

அரையிறுதிச்சுற்று ஃபிரான்சஸ் டியாஃபோ (அமெரிக்கா) 6-7 (6/8), 6-3, 6-1, 6-7 (5/7), 6-3

இறுதிச்சுற்று கேஸ்பா் ரூட் (நாா்வே) 6-4, 2-6, 7-6 (7/1), 6-3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com