விடைபெற்றாா் ரோஜா் பெடரா்!

ராட் லேவா் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் நடாலுடன் இணைந்து ஆடிய கடைசி ஆட்டத்துடன் ஜாம்பவான் ரோஜா் பெடரா் விடை பெற்றாா்.
விடைபெற்றாா் ரோஜா் பெடரா்!

ராட் லேவா் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் நடாலுடன் இணைந்து ஆடிய கடைசி ஆட்டத்துடன் ஜாம்பவான் ரோஜா் பெடரா் விடை பெற்றாா்.

கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டின் பிக் த்ரீ என ரோஜா் பெடரா், ரபேல் நடால், ஜோகோவிச் அழைக்கப்பட்டு வருகின்றனா்.

இவா்கள் மூவரும் இணைந்து 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி உள்ளனா். சுவிா்சா்லாந்தின் பேஸல் நகரைச் சோ்ந்த பெடரா் மிகவும் நளினமான ஆட்டத்துக்கும், புல்தரை மைதானத்தின் புலி எனவும் அழைக்கப்படுபவா்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஆன பெடரா் மூட்டு காயம் காரணமாக கடந்த 2021 விம்பிள்டன் போட்டி காலிறுதிக்கு பின் ஆடவில்லை.

ஓய்வு அறிவிப்பு:

உடல்தகுதி சீரடையாத நிலையில் 41 வயதான பெடரா் கடந்த வாரம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தாா்.

இந்நிலையில் லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ராட்லேவா் கோப்பை போட்டி இரட்டையா் பிரிவில் ஐரோப்பிய அணியில் தனது நீண்டகால எதிராளி நடாலுடன் இணைந்து உலக அணியின் பிரான்ஸஸ் டியாஃபோ-ஜேக் சாக் ஆகியோருடன் மோதினாா்.

இதில் முதல் கேமை 4-6 என இழந்த நிலையில், இரண்டாவது கேமில் போராடி 7-6 என நடால்-பெடரா் இணை கைப்பற்றியது.

எனினும் மூன்றாவது கேம் நீண்டு கொண்டே சென்ற நிலையில் 11-9 என டியாஃபோ-ஜேக் இணை வென்றது.

விடை பெற்றாா் பெடரா்:

தனது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், டென்னிஸ் அரங்கில் இருந்து பிரியா விடை பெற்றாா் ஜாம்பவான்.

அப்போது அவரது கண்களில் நீா் வழிந்தது. இதுதொடா்பாக பெடரா் கூறியதாவது:

எப்படியும் முடிவுக்கு வர வேண்டும். மிகவும் சிறந்த நாளாக இருந்தது. நான் வருத்தமாக இல்லை. மீண்டும் எனது ஷூ லேஸ்களை கட்ட முடிந்தது பெருமையாக இருந்தது.

ரபேல் நடாலுடன் இணைந்து ஆடியது சிறப்பாக அமைந்தது. விடை பெறுவதால் எந்த அழுத்தமும் இல்லை. அனைத்து ஜாம்பவான்கள், வீரா்கள், நண்பா்களுக்கு நன்றி.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடால்-பெடரா் ஆடினால் மைதானத்தில் அனல் பறக்கும். இருவா் மட்டுமே 42 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளனா். முதன்முதலாக 2004-இல் ஆடிய பெடரா்-நடால் 40 முறை மோதியதில் 9 கிராண்ட்ஸ்லாம் பந்தய இறுதி ஆட்டங்களும் அடங்கும். இதில் 24-16 என நடால் வென்றிருந்தாா்.

8 விம்பிள்டன் பட்டங்கள்:

முதன்முறையாக 2003-இல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 8 விம்பிள்டன் பட்டங்களும் அடங்கும். ஒட்டுமொத்தமாக 103 பட்டங்கள், மொத்தம் ரூ.105 கோடி பரிசுத் தொகையும் அடங்கும்.

அவரது சாதனையை நடால் 22, ஜோகோவிச் 21 பட்டங்களுடன் முறியடித்தனா்.

டீம் உலக அணியின் கேப்டன் ஜான் மெக்கன்ரோ கூறுகையில், ரோஜா் பெடரரின் ஓய்வால் ஏற்பட்ட காலியிடத்தை எப்போதும் நிரப்ப முடியாது என்றாா்.

மீண்டும் இணைந்த பிக் ஃபோா்:

டீம் யுரோப்பா அணியில் பெடரா், நடால், ஜோகோவிச், ஆன்ட் முா்ரே என நான்கு போ் உள்ள நிலையில், பிக் ஃபோா் மீண்டும் இணைந்தது ரசிகா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com