இந்தியாவுக்கு எதிராக எடுபடுமா இங்கிலாந்தின் பேஸ்பால் யுக்தி? இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!
By DIN | Published On : 03rd August 2023 06:34 PM | Last Updated : 03rd August 2023 06:34 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி அடுத்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசலாவில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தனது பேஸ்பால் யுக்தியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் இந்த யுக்தி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இங்கிலாந்து தொடர்ந்து அதே யுக்தியை பயன்படுத்தி வருகிறது. அந்த யுக்தியின் மூலம் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்திக்கு பெரும் சவால் எழ உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற பிரபல இந்திய வீரர்!
இது தொடர்பாக ஐசிசிக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்திக்கான அடுத்த சவால் உருவாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இந்த சுற்றுப்பயணம் மிகப் பெரிய சவாலாக அமையப் போகிறது. இந்த முறை இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி இந்தியாவின் வலிமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் சுழலை எதிர்த்து பேஸ்பால் யுக்தி எவ்வாறு செயல்பட போகிறது என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கப் போகிறது. இங்கிலாந்திலும் ஜேக் லீச் மற்றும் ரீகன் அகமது போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஜோஸ் டங் சிறப்பாக பந்து வீசுகிறார். ஆலி ராபின்சன் மிகுந்த திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...