ஜோகோவிச், ரூபலேவ் முன்னேற்றம்
By DIN | Published On : 24th January 2023 05:31 AM | Last Updated : 24th January 2023 05:31 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தப் போட்டியில் 10-ஆவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 22-ஆவது முறையாகவும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்புடன் இருக்கும் ஜோகோவிச், ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஜோகோவிச்சுக்கும், 22-ஆவது இடத்திலிருந்த மினாருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச் நேர் செட்களில் 6-2, 6-1, 6-2 என எளிதாக வெற்றி பெற்றார்.
அடுத்ததாக காலிறுதியில் அவர், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை சந்திக்கிறார். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ரூபலேவ் தனது 4-ஆவது சுற்றில், 9-ஆம் இடத்திலிருந்த டென்மார்க்கின் ஹோல்கர் ருன் அளித்த சவாலை 6-3, 3-6, 6-3, 4-6, 7-6 (11/9) என்ற செட்களில் போராடி முறியடித்தார்.
காலிறுதிச்சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால் - சக நாட்டவரான பென் ஷெல்டன் சந்திக்கவுள்ளனர். முன்னதாக டாமி 6-2, 4-6, 6-2, 7-5 என்ற செட்களில், 24-ஆவது இடத்திலிருந்த ஸ்பெயினின் ராபர்டோ பெüதிஸ்டா அகுட்டை வீழ்த்தி வெளியேற்றினார். பென் தனது ஆட்டத்தில் 6-7 (5/7), 6-2, 6-7 (4/7), 7-6 (7/4), 6-2 என்ற செட்களில் சக நாட்டவரான ஜே.ஜே. வோல்ஃபை தோற்கடித்தார்.
மகளிர்: இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் கரோலின் கார்சியா 4-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
அவரை 7-6 (7/3), 6-4 என்ற செட்களில் வென்றார் போலந்தின் மக்தா லினெட். கடந்த ஆண்டு சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் மக்தா இறுதிச்சுற்று வரை வந்தவராவார். லினெட் தனது காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை சந்திக்க இருக்கிறார். முன்னதாக கரோலினா 6-0, 6-4 என எளிதாக, 23-ஆவது இடத்திலிருந்த சீனாவின் ஜாங் ஷுவாயை தோற்கடித்தார்.
போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா 7-5, 6-2 என்ற செட்களில், 12-ஆவது இடத்திலிருந்த சுவிட்ஸர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளார். குரோஷியாவின் டோனா வெகிச் 6-2, 1-6, 6-3 என்ற செட்களில் லிண்டா ஃப்ருவிர்டோவாவை வென்றார். இதையடுத்து காலிறுதி ஒன்றில் டோனா - சபலென்கா சந்தித்துக் கொள்கின்றனர்.