கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஒலிம்பியா: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாள்கள் இருக்கும் நிலையில், அந்தப் போட்டிக்கான தீபம், பாரம்பரிய முறைப்படி செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டு, தீப ஓட்டம் தொடங்கியது.

33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடப்பாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 19 நாள்கள் நடைபெறவுள்ளன. போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாள்களே இருக்கும் நிலையில், அதற்கான தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, பழைய ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் உள்ள ஒலிம்பியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், பாரீஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

கிரேக்க கடவுள் ஸீயஸின் மனைவி ஹெராவின் கோவில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி இந்நிகழ்ச்சி அரங்கேறியது. பண்டைய கிரேக்க மத குரு வேடமிட்ட நடிகை, கிரேக்க சூரியக் கடவுளான அப்போலோவை வழிபட்டு, அதன் பின்னர் தீபமேற்றினார். வழக்கமாக, பரவளையக் கண்ணாடி அமைப்பு வைக்கப்பட்டு, அதில் குவியும் சூரிய ஒளியின் வெப்பத்தைக் கொண்டு பாரம்பரியமான வெள்ளி டார்ச்சில் தீபம் உருவாக்கப்படும்.

ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற செவ்வாய்க்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மாற்று ஏற்பாடாக கிரேக்க முறையில் வடிவமைக்கப்பட்ட சிறிய பாத்திரத்தில் நெருப்பு வைக்கப்பட்டிருந்தது. தலைமை மத குருவாக நடித்தவர், அதிலிருந்தே டார்ச்சில் தீபத்தை பற்றவைத்தார்.

அவரிடம் இருந்து முதலில், கிரீஸ் துடுப்புப் படகு வீரர் ஸ்டெஃபனோஸ் டுஸ்கோஸ், பாரீஸ் ஒலிம்பிக்கிற்கென உருவாக்கப்பட்ட டார்ச்சில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிக் கொண்டு, வெற்றியின் அடையாளமாக கருதப்படும் ஆலிவ் செடியையும் பெற்றுக் கொண்டு தீப ஓட்டத்தை தொடங்கினார்.

அவரிடம் பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரெ மனாடுவும், பிறகு அவரிடமிருந்து கிரீûஸ சேர்ந்த மூத்த ஐரோப்பிய யூனியன் அதிகாரியான மார்கரிடிஸ் ஷினாஸூம் பெற்றுக் கொண்டு தீப ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தீப ஓட்டமானது, கிரீஸில் சுமார் 5,000 கி.மீ. பயணித்து, நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கிய (1896) ஏதென்ஸ் நகரில் வரும் 26-ஆம் தேதி பாரீஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அங்கிருந்து கடல் மார்க்கமாக பயணித்து மே 8-ஆம் தேதி பிரான்ஸின் மார்சிலே நகரை வந்தடைகிறது. அங்கிருந்து பிரான்ஸ் முழுவதுமாக 68 நாள்கள், 65 பிராந்தியங்களில், 66 நகரங்களில் பயணித்து ஜூலை 26-ஆம் தேதி போட்டி தொடக்க நாளில் பாரீஸ் வருகிறது. இடையே கடல் பரப்புகளிலும் அந்த டார்ச் பயணிக்கவுள்ளது. அதை மொத்தமாக சுமார் 11,000 பேர் தங்கள் கையில் ஏந்தி தீப ஓட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதுவரை இல்லாத நிறம்...

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தடகள விளையாட்டுகளுக்கான தடங்கள் (டிராக்) யாவும் அடர் ஊதா (பர்ப்பிள்) நிறத்தில் பதிக்கப்படுகின்றன. வழக்கமாக, செந்நிறத்திலான தடங்கள் பதிக்கப்படும். இந்த முறை அடர் ஊதா நிறத்திலான ரப்பர் தடங்கள், தடகள போட்டிகள் நடைபெறும் பிரான்ஸின் தேசிய மைதானத்தில் பதிக்கப்பட்டு வருகின்றன.

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அந்த ரப்பர் பட்டைகள் அடங்கிய சுமார் 1,000 உருளைகள் இதற்காக பிரான்ஸ் கொண்டு வரப்பட்டு, 2800-க்கும் அதிகமான டின்கள் பசை கொண்டு ஒட்டப்பட்டு வருகின்றன. போட்டியாளர்களின் ஆற்றல் வீணாவதை குறைத்து, அவர்களது செயல்திறனை அதிகரிக்கும் வகையிலான தொழில்நுட்பத்துடன் இந்த தடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வை மேம்படுத்த...

பாரீஸ் நடைபெறவுள்ள ஒலிம்பிக் (ஜூலை 26 - ஆக.11), பாராலிம்பிக்

(ஆக.28 - செப். 8) போட்டிகளைக் கொண்டு, பாரீஸின் வடபகுதியில் உள்ள சென்-செயின்ட்- டெனிஸ் பகுதியில் வாழ்வாதாரத்தை வளப்படுத்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸின் ஏழ்மையான பகுதியாக இருக்கும் அந்த இடத்தில் 130 நாடுகளைச் சேர்ந்த, 170-க்கும் அதிகமான மொழிகள் பேசக் கூடிய 16 லட்சம் புலம்பெயர்ந்தோர் உள்ளனர். இனப்பாகுபாடு உள்பட பல்வேறு தடைகளைச் சந்திக்கும் அந்தப் பகுதி குழந்தைகளுக்கு, அதிலிருந்து மீள்வதற்கான ஆதாரமாக விளையாட்டு உள்ளது. பிரான்ஸின் நட்சத்திர கால்பந்து வீரரான கிலியன் பாபே அங்கிருந்து மீண்டவர் என்பதை குறிப்பிடலாம்.

தற்போது ஒலிம்பிக் காரணமாக அங்கு விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளுக்காக அந்தப் பகுதியிலிருந்து 45,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டி நிறைவுக்குப் பிறகு, அங்கு கட்டமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்திலிருக்கும் கட்டடங்கள் வீடுகள், அலுவலகங்களாக அந்தப் பகுதி மக்களுக்கு பயன்படவுள்ளன.

ஒலிம்பிக் டார்ச்...

தற்போது ஏற்றப்பட்டுள்ள இந்த பாரீஸ் ஒலிம்பிக் தீபத்தை, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டார்ச்சில் ஏந்தி ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெறும்.

இந்த டார்ச்சை பிரான்ஸ் வடிவமைப்பாளரான மேத்யூ லெஹானியுர் உருவாக்கியுள்ளார். சமத்துவம், நீர், அமைதி ஆகியவற்றை கருவாகக் கொண்டு அந்த டார்ச் உருவாக்கப்பட்டுள்ளது. தீப ஓட்டத்துக்கா சுமார் 2,000 டார்ச்களை, பிரான்ûஸ சேர்ந்த ஆர்செலர் மிட்டால் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரூ.81,150 கோடி...

தற்போதைய நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவாக ரூ.81,150 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இது, கடந்த 3 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு செலவிடப்பட்ட தொகையை விடக் குறைவாகும். எனினும் இது மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமான தொகை, விளம்பரதாரர்கள், டிக்கெட் விற்பனை, நிதி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காகவே ரூ.26,000 கோடி வரை செலவாகும் என பிரான்ஸ் தணிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

நதியில் அணிவகுப்பு...

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிகளை மைதானத்துக்கு வெளியே அந்நகரின் பிரதான பகுதியில் பாயும் சென் நதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அணிவகுப்பு நிகழ்வின்போது ஒவ்வொரு நாட்டின் குழுவையும் தனித் தனி படகில் ஏற்றி (சுமார் 10,500 பேர்) நதியிலே 6 கி.மீ. நீளத்துக்கு அணிவகுத்து வரவும், நதியின் இருமறுங்கிலும் சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் திரண்டு அவர்களை உற்சாகப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்த பார்வையாளர்கள், அழைப்பிதழின் மூலமாக அனுமதிக்கப்பட்டவர்களாக மட்டுமே இருப்பர்.

திறந்த வெளியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலையில், அணிவகுப்பு தொலைவை குறைக்கவோ அல்லது நிகழ்ச்சியை தேசிய மைதானத்துக்கு மாற்றப்படலாம் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

3.5 லட்சம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் மொத்தமாக 3.5 லட்சம் மணி நேரங்களுக்கு தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட உள்ளது.

இதை கோடிக் கணக்கான மக்கள் கண்டு களிக்கவுள்ளணர். மேலும், லட்சக் கணக்கான பார்வையாளர்கள் நேரிலும் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

35

ஒலிம்பிக் போட்டிகளின்விளையாட்டுகள் யாவும் பாரீஸின்35 வெவ்வேறு இடங்களில்நடைபெறவுள்ளன.

10,500

சுமார் 155 நாடுகளில் இருந்து 10,500-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

32/329

32 விளையாட்டுகளில், மொத்தமாக 329 பிரிவுகளில்ஆட்டங்கள் மற்றும் பந்தயங்கள் நடத்தப்படவுள்ளன.

20,000

போட்டிகள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக உலகெங்கிலும் இருந்து, அங்கீகரிக்கப்பட்ட 20,000 செய்தியாளர்கள் பிரான்ஸ் வருகின்றனர்.

6,00,000

போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் தங்கவிருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில் நாளொன்றுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் உணவு விநியோகிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com