ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
அணியின் தடுப்பரணாக செயல்பட்டுவந்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வுபெற்ற நிலையில் இந்தியா பங்கேற்கும் இந்த முதல் போட்டியில், கிருஷண் பகதூர் பதக் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
8-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி, சீனாவின் ஹுலுன்புயிர் நகரில் வரும் செப்டம்பர் 8 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, போட்டியை நடத்தும் சீனா, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை, ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அணியைச் சேர்ந்த 10 பேர் இதிலும் இடம் பிடித்துள்ளனர். அனுபவ வீரரான ஸ்ரீஜேஷ் கோல்கீப்பராக இருந்த வரை, பேக்-அப் கோல்கீப்பராக இருந்த கிருஷண் பகதூர் பதக், இந்தப் போட்டியில் அணியின் பிரதான கோல்கீப்பராக செயல்படவுள்ளார். சூரஜ் கர்கேரா ரிசர்வ் கோல்கீப்பராக இருக்கிறார்.
மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர, மிட்ஃபீல்டர் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டன் ஆகியிருக்கிறார். ஹர்திக் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், ஷம்ஷேர் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இந்தியா முதலில் சீனாவுடனும் (செப். 8), அடுத்து ஜப்பானுடனும் (செப். 9) பின்னர் மலேசியாவுடனும் (செப். 11) மோதுகிறது. 4-ஆவது ஆட்டத்தில் தென் கொரியாவுடன் (செப். 12) மோதும் இந்தியா, பின்னர் பாகிஸ்தானை (செப். 14) சந்திக்கிறது.
அணி விவரம்
கோல்கீப்பர்கள்: கிருஷண் பகதூர் பதக், சூரஜ் கர்கேரா.
டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங், ஜக்ராஜ் சிங், சஞ்சய், சுமித்.
மிட்ஃபீல்டர்கள்: ராஜ்குமார் பால், நீலகண்ட சர்மா, விவேக்சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், முகமது ரஹீல் மெüசீன்.
ஃபார்வர்ட்ஸ்: அபிஷேக், சுக்ஜீத் சிங், அராய்ஜீத் சிங் ஹண்டால், உத்தம் சிங், குர்ஜோத் சிங்.