மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் பிகாரில் உள்ள பழமையான நகரமான ராஜ்கிரில் நவம்பர் 11 முதல் 20 வரை நடத்தப்படும் என்று இந்திய விளையாட்டு அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராஜ்கிர் மைதானத்தில் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஹாக்கி போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டது. அதில், போட்டியை நடத்திய இந்திய அணி பட்டத்தை வென்றது.
நடப்புச் சாம்பியனான இந்தியாவைத் தவிர, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் பங்கேற்க உள்ள அணிகளுக்கு வரவேற்பை தெரிவித்துள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமார், “8 ஆவது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பிகார் அரசின் ஆதரவை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்வில் பங்கேற்கும் சர்வதேச அணிகளுக்கு நாங்கள் மிகவும் அன்பான வரவேற்பு அளிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஃபுமியோ ஓகுரா கூறுகையில், “கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை நடத்திய ஹாக்கி இந்தியாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த முந்தைய சீசனைப் போலவே பிகாரின் ராஜ்கிரில் நடைபெறும் சாம்பியன்ஸ் போட்டியும் மாபெரும் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்’ என்றார்.
ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறுகையில், “பிகாரில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை என்பதால் ஹாக்கிக்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்” என்றார்.