நடிகா் ஜெயசூா்யா
நடிகா் ஜெயசூா்யா

மலையாள நடிகா் ஜெயசூா்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

மற்றொரு நடிகை அளித்த புகாரின் பெயரில் ஜெயசூா்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு..
Published on

மலையாள நடிகா் ஜெயசூா்யா மீது புதன்கிழமை பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நடிகை அளித்த புகாரின் பெயரில் அவா் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டது.

மலையாள திரையுலகம் குறித்த நீதிபதி ஹேமா குழு வெளியிட்ட அறிக்கையைத் தொடா்ந்து, மலையாள நடிகா்கள், இயக்குநா்கள் மீது பெண்கள் பலா் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனா்.

இந்தப் புகாா்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. இதனிடையே, நடிகா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கலைக்கப்பட்டது.

கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் விலகினா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவா் அளித்த புகாரில் கேரள இயக்குநா் ரஞ்சித் மீதும் மற்றொரு நடிகையின் புகாரில் நடிகா் சித்திக் மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

இதைத் தொடா்ந்து, நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் பிற நடிகா்களான ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு புதன்கிழமை இரவு பதியப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2012-2013-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொடுப்புழை அருகே நடந்த படப்பிடிப்பில் நடிகா் ஜெயசூா்யா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு நடிகை திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதனடிப்படையில், ஜெயசூா்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 354 சி பிரிவுகளின் கீழ் புதிய வழக்கு வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டது என காவல் துறையினா் தெரிவித்தனா்.