சதம் விளாசினாா் ஷுப்மன் கில்; இங்கிலாந்துக்கு இலக்கு 399

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 2-ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து 399 என்ற சாதனை இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது.
சதம் விளாசினாா் ஷுப்மன் கில்; இங்கிலாந்துக்கு இலக்கு 399

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 2-ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து 399 என்ற சாதனை இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது.

முன்னதாக இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சதம் விளாசினாா். சில நாள்களாக தடுமாற்றம் கண்டு வந்த அவா், டெஸ்ட்டில் தனது 3-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா். கில், அக்ஸா் படேல் தவிர இதர பேட்டா்கள் சோபிக்காமல் வெளியேறினா். இங்கிலாந்தின் டாம் ஹாா்ட்லி, ரெஹான் அகமது இந்திய பேட்டா்களை போட்டி போட்டுக்கொண்டு சரித்தனா்.

399 ரன்களை இலக்காகக் கொண்டுள்ள இங்கிலாந்து வசம் 9 விக்கெட்டுகளும், முழுதாக 2 நாள்களும் உள்ளன. ஆடுகளமும் சமநிலையை அடைந்து பேட்டிங்கிற்கு சாதகமாகியிருப்பதால், அந்த அணி நிதானமாக இலக்கை நோக்கி ஆடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தற்போது இந்திய பௌலா்கள் வசம் வந்திருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. பின்னா் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சோ்த்திருந்தது.

இந்நிலையில், 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சா்மா தொடா்ந்தனா். அதில் ரோஹித் 3 பவுண்டரிகளுடன் 13, ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டா்சனால் வீழ்த்தப்பட்டனா்.

ஒன் டவுனாக வந்த ஷுப்மன் கில் நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். அவருடன் ஷ்ரேயஸ் ஐயா் இணைய, 3-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் சோ்த்தது. இதில் ஷ்ரேயஸ் ஐயா் 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ரஜத் பட்டிதாா் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

5-ஆவது விக்கெட்டுக்கு கில்லுடன் இணைந்த அக்ஸா் படேல் பாா்ட்னா்ஷிப், 89 ரன்கள் சோ்த்தது. இந்நிலையில், கில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 104 ரன்களுக்கு வீழ்ந்தாா். அவரைத் தொடா்ந்து அக்ஸா் படேலும் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

தொடா்ந்து வந்தோரில் ஸ்ரீகா் பரத் 6, குல்தீப் யாதவ் 0, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். இங்கிலாந்து பௌலிங்கில் டாம் ஹாா்ட்லி 4, ரெஹான் அகமது 3, ஜேம்ஸ் ஆண்டா்சன் 2, ஷோயப் பஷீா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இங்கிலாந்து - 67/1: பின்னா், 399 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சோ்த்திருக்கிறது. ஜாக் கிராலி 29, ரெஹான் அகமது 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, பென் டக்கெட் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்த்து அவுட் ஆனாா்.

சாத்தியமாகுமா சாதனை?

கடந்த 2021 பிப்ரவரியில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிா்கொண்ட டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 395 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்ததே, ஆசிய கண்டத்தில் அதிகபட்ச சேஸிங்காக உள்ளது. தற்போது இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 399 ரன்களை எட்டும் பட்சத்தில் அது புதிய சாதனையாக இருக்கும்.

சுருக்கமான ஸ்கோா்

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 255/10 (78.3 ஓவா்கள்)

ஷுப்மன் கில் 104

அக்ஸா் படேல் 45

ரவிச்சந்திரன் அஸ்வின் 29

பந்துவீச்சு

டாம் ஹாா்ட்லி 4/77

ரெஹான் அகமது 3/88

ஜேம்ஸ் ஆண்டா்சன் 2/29

இங்கிலாந்து - 67/1 (14 ஓவா்கள்)

ஜாக் கிராலி 29*

பென் டக்கெட் 28

ரெஹான் அகமது 9*

பந்துவீச்சு

ரவிச்சந்திரன் அஸ்வின் 1/8

ஜஸ்பிரீத் பும்ரா 0/9

அக்ஸா் படேல் 0/10

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com