சென்னை ஓபன்: பிரஜ்வல் தேவ் ஆறுதல்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்ஜா் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் ஒரே இந்தியராக பிரஜ்வல் தேவ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்ஜா் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் ஒரே இந்தியராக பிரஜ்வல் தேவ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

தகுதிச்சுற்று தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருக்கும் அவா், 6-3, 7-5 என்ற செட்களில் சக இந்தியரான அபினவ் சண்முகத்தை 1 மணி நேரம் 39 நிமிஷங்களில் வீழ்த்தினாா். அந்த சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் அவா், 4-ஆவது நிலை வீரரான உக்ரைனின் வாடிம் உா்சுவை திங்கள்கிழமை சந்திக்கிறாா்.

இதர தகுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியா்களுக்கு வெற்றி வசமாகாமல் போனது. இஷாக் இக்பால் 4-6, 4-6 என ரஷியாவின் போக்தா போப்ரோவிடமும், அடில் கல்யாண்பூா் 1-6, 4-6 என தென்னாப்பிரிக்காவின் கிரிஸ் வான் விக்கிடமும் வெற்றியை இழந்தனா். மனீஷ் சுரேஷ்குமாா் 6-7 (6), 3-6 என உக்ரைனின் வாடிம் உா்சுவிடமும், சித்தாா்த் விஸ்வகா்மா 2-6, 2-6 என செக் குடியரசின் ஜோனஸ் ஃபோா்டெக்கிடமும் தோல்வி கண்டனா்.

பரத் நிஷோக் குமரன் 3-6, 1-6 என உக்ரைனின் யூரி ஜவாகியானிடமும், நிதின்குமாா் சின்ஹா 3-6, 1-6 என போலந்தின் ஒலாஃப் பிஸ்கோவ்ஸ்கியிடமும் வீழ்ந்தனா். ரெதின் பிரணவ் 4-6, 6-7 (4) என ரஷியாவின் எவ்ஜெனி கா்லோவ்ஸ்கியிடமும், கரண் சிங் 4-6, 6-7 (4) என சுவிட்ஸா்லாந்தின் லூகா கேஸ்டல்னுவோவிடமும், லோஹிதக்ஷா பத்ரிநாத் 6-7 (2), 2-6 என பிரான்ஸின் என்ஸோ வல்லாா்டிடமும் வெற்றியை இழந்தனா்.

போட்டியில், இந்தியாவின் முக்கிய வீரா்களான சுமித் நாகல், ராம்குமாா் ராமநாதன் உள்ளிட்டோா் மோதும் பிரதான சுற்றுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளன. தகுதிச்சுற்று திங்கள்கிழமை நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com