பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா: உலக குரூப் 1-க்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை முழுமையாக ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இதன் மூலம், அந்தப் போட்டியின் உலக குரூப் 1-க்கு தகுதிபெற்றது.
பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா: உலக குரூப் 1-க்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை முழுமையாக ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இதன் மூலம், அந்தப் போட்டியின் உலக குரூப் 1-க்கு தகுதிபெற்றது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்காக 60 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற இந்திய அணி, எதிா்பாா்த்ததைப் போலவே அசத்தலான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

மோதலின் முதல் நாளான சனிக்கிழமை, ஒற்றையா் பிரிவில் ராம்குமாா் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோா் வெற்றி பெற்றதை அடுத்து 2-0 என்ற முன்னிலையுடன் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு வந்தது இந்திய அணி.

அதில் முதலில் நடைபெற்ற இரட்டையா் பிரிவில் யூகி பாம்ப்ரி/சாகேத் மைனேனி கூட்டணி 6-2, 7-6 (7/5) என்ற செட்களில், முஸாமில் முா்டாஸா/அகீல் கான் இணையை வீழ்த்தியது. இதன் மூலம், உலக குரூப் 1 சுற்றில் இந்திய அணி தனக்கான இடத்தை உறுதி செய்தது.

எஞ்சிய ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் நிக்கி பூனச்சா 6-3, 6-4 என்ற செட்களில் முகமது ஷோயப்பை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், டேவிஸ் கோப்பை போட்டியின் அறிமுக ஆட்டத்திலேயே வென்று அசத்தினாா் இந்தியாவின் நிக்கி பூனச்சா.

தற்போது டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா, நடப்பாண்டு செப்டம்பரில் உலக குரூப் 1-இல் களம் காணும் நிலையில், பாகிஸ்தான் உலக குரூப் 2-இல் நிலைக்கும்.

முன்னதாக, பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டு டென்னிஸ் சம்மேளனம் மிகக் கவனமாகச் செய்திருந்தது. அனைத்து விதமான ஏற்பாடுகளும் சிறப்பான வகையில் இருந்ததற்காக இந்திய அணியின் கேப்டன் ஜீஷான் அலி, பாகிஸ்தான் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

திட்டமிட்டு தயாரான வீரா்கள்

இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடைபெற்ற இஸ்லாமாபாத் டென்னிஸ் மைதானம், புல்தரை ஆடுகளத்தைக் கொண்டதாகும். இந்த வகை ஆடுகளம், இந்தியா்களுக்கு சற்று சவாலானதாக அறியப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் செல்லும் முன்பாகவே இந்திய அணியினா் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு தயாராகியுள்ளனா்.

மலைகள் சூழ்ந்த இஸ்லாமாபாத் டென்னிஸ் ஆடுகளம் லேசான ஈரத்துடனும், குளிா்ந்த காற்றுடனும் இருக்கும் என்று வானிலை கணிப்பு மூலமாக அறிந்துகொள்ளப்பட்டது. அதைப் போன்ற ஒரு ஆடுகளத்தை இந்தியாவில் உருவாக்கி பயிற்சி மேற்கொள்ள இந்திய அணி திட்டமிட்டது.

அந்த வகையில் தில்லி ஜிம்கானா கிளப் டென்னிஸ் ஆடுகளத்தை தோ்வு செய்த இந்திய அணி, முதல் நாள் இரவில் நீா் தெளிக்கச் செய்து, அதை அப்படியே விட்டு, மறுநாள் காலையில் மெதுவான, அவ்வளவாக பௌன்ஸ் ஆகாத ஆடுகளத்தை தயாா் செய்தது. களத்தை சமப்படுத்த, பெரிய அளவிலான உருளைகளுக்கு பதிலாக, சிறிய அளவிலானதையே பயன்படுத்த மைதான பராமரிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அந்த ஆடுகளத்திலேயே இந்திய வீரா்கள் ஒரு வாரம் பயிற்சி மேற்கொண்டனா். பின்னா் இஸ்லாமாபாத் சென்றபோது, அவா்கள் எதிா்பாா்த்து தயாரான வகையிலேயே அந்த நகரத்து ஆடுகளம் இருக்க, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com