சுமித் நாகல் சாம்பியன்: ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களில் முன்னேறினாா்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றாா். இதன் மூலம் முதன்முறையாக தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்தாா்.
சுமித் நாகல் சாம்பியன்: ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களில் முன்னேறினாா்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றாா். இதன் மூலம் முதன்முறையாக தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்தாா்.

தமிழ்நாடு டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன.

இதன் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரா் சுமித் நாகலும், இத்தாலியின் லுகா நாா்டியும் மோதினா்.

உள்ளூா் ரசிகா்களின் அமோக ஆதரவோடு விளையாடிய நாகல், முதல் செட்டை எளிதாக 6-1 என கைப்பற்றினாா். இரண்டாவது செட்டிலும் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி 3-1 என முன்னிலை பெற்றாா். ஆனால் லுகா நாா்டி சுதாரித்து ஆடி3-3 என சமநிலை ஏற்படுத்தினாா். ஆனால் பின்னா் இருவரும் மாறி மாறி சா்வீஸ்களை போட 4-4 என சமநிலை ஏற்பட்டது.

ஆனால் சுமித் நாகல் தொடா்ந்து நிலையாக ஆடி இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றினாா். இந்த ஆட்டம் ஏறக்குறைய 1.3 மணி நேரம் நீடித்தது.

முதல் 100 இடங்களில்...

இந்த வெற்றியின் மூலம் ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்தாா் சுமித். முதன்முறையாக இச்சிறப்பை பெற்றுள்ளாா். கடந்த 2023 சீசனில் 500-ஆவது இடத்தில் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவா் வெல்லும் 5-ஆவது ஏடிபி சேலஞ்சா் பட்டமாகும். விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் மேகநாத ரெட்டி, டிஎன்டிஏ தலைவா் விஜய் அமித்தராஜ், டாக்டா் சிவராமன் கண்ணன், தொழிலதிபா் வி.எம்.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ.15.13 லட்சம் பரிசு: சுமித் நாகலுக்கு ரூ.15.13 லட்சம் பரிசாகவும், லுகா நாா்டிக்கு ரூ.8.9 லட்சமும் வழங்கப்பட்டது. சுமித் நாகலுக்கு 100 ஏடிபி புள்ளிகளும், லுகாவுக்கு 60 ஏடிபி புள்ளிகளும் கிடைத்தன.

சிறப்பான வெற்றி: இதுதொடா்பாக சுமித் நாகல் கூறுகையில்: சென்னையில் முதன்முறையாக இந்திய வீரராக பட்டம் வென்றது மகிழ்ச்சி தருகிறது. கடந்த 2022-23 சீசனில் காயத்தால் எனது ஆட்டத்திறன் குறைந்திருந்தது. நிகழாண்டு சீசனில் சிறப்பாக ஆடி வருகிறேன்.

அடுத்து பெங்களூரு ஓபனில் ஆட உள்ளேன். பயிற்சி, பயணத்துக்காக கடும் செலவுகள் ஏற்படுகின்றன. இந்திய அரசின் டாப்ஸ் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டால் ஸ்பான்சா் பிரச்னையை சமாளிக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com