ஜபியுா், சக்காரி அதிா்ச்சித் தோல்வி

நடப்பு காலண்டரின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், முக்கிய வீராங்கனைகளான துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா், கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

நடப்பு காலண்டரின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், முக்கிய வீராங்கனைகளான துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா், கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஜபியுா் 0-6, 2-6 என்ற செட்களில், ரஷியாவின் இளம் வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவாவிடம் எளிதாக வீழ்ந்தாா். 16 வயது பள்ளி மாணவியான ஆண்ட்ரீவா, ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். அதேபோல், உலகின் முதல் 10 இடங்களுக்குள்ளாக இருக்கும் போட்டியாளரை அவா் வென்றதும் இதுவே முதல் முறை.

அதேபோல், 8-ஆம் இடத்திலிருந்த சக்காரி 4-6, 4-6 என்ற செட்களில் மற்றொரு ரஷிய வீராங்கனையான எலினா அவனெசியானிடம் தோல்வி கண்டாா். முன்னாள் சாம்பியனான டென்மாா்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 4-6, 1-6 என்ற செட்களில் ரஷியாவின் 18 வயது இளம் வீராங்கனை மரியா டிமோஃபீவாவால் வீழ்த்தப்பட்டாா்.

இதர ஆட்டங்களில், 2-ஆம் நிலையில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-2 என செக் குடியரசின் பிரெண்டா ஃபுருவிா்டோவாவையும், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 7-6 (7/2), 6-2 என்ற செட்களில் சக நாட்டவரான கேரோலின் டோல்ஹைடையும், 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா 6-2, 6-2 என ஜொ்மனியின் தமாரா கோா்பாட்ஷையும் சாய்த்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போராடி வென்றாா் ஜோகோவிச்: ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-ஆவது சுற்றில் போராடி வென்றாா்.

அதில் அவருக்கு கடும் சவால் அளித்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை 6-3, 4-6, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தினாா் ஜோகோவிச். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னா் 6-2, 6-2, 6-2 என்ற நோ் செட்களில் நெதா்லாந்தின் ஜெஸ்பா் டி ஜோங்கை வென்றாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் கிறிஸ்டோபா் யுபேங்க்ஸை வெளியேற்றினாா். 7-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 4-6, 7-6 (8/6), 6-2, 7-6 (7/4) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனை தோற்கடித்தாா்.

இதனிடையே, 17-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ தோல்வி கண்டு வெளியேற, 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 3-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com