ஸ்வியாடெக் அதிா்ச்சி; நோஸ்கோவா வெற்றி

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் சனிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் சனிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் அவரை, 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா. உலகின் 50-ஆம் நிலையில் இருக்கும் லிண்டா, 19 வயது இளம் வீராங்கனையாவாா். ஸ்வியாடெக் ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை (2022) வந்ததே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், இந்தப் போட்டியில் மீண்டும் ஒருமுறை சறுக்கியிருக்கிறாா்.

தொடா்ந்து 18 ஆட்டங்களில் வெற்றி நடை போட்டு வந்த ஸ்வியாடெக்குக்கு தடை ஏற்படுத்தியிருக்கிறாா் நோஸ்கோவா. அவருக்கு இது முதல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் மகளிா் பிரிவில் டாப் 10 வீராங்கனைகளில் பலா் வெளியேற, இளம் வீராங்கனைகள் மிளிா்கின்றனா்.

டாப் 10 வீராங்கனைகளில் தற்போது பெலாரஸின் அரினா சபலென்கா (2), அமெரிக்காவின் கோகோ கௌஃப் (4), செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா (10) ஆகியோா் மட்டுமே களத்தில் உள்ளனா்.

இதனிடையே 3-ஆவது சுற்றில், 11-ஆவது இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 1-6, 5-7 என்ற செட்களில், 18-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவால் வீழ்த்தப்பட்டாா். அதேபோல், யு.எஸ். ஓபன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸும் 7-6 (10/8), 1-6, 4-6 என்ற செட்களில் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவிடம் வெற்றியை இழந்தாா்.

19-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, இத்தாலியின் ஜேஸ்மின் பாலினி, பிரான்ஸின் ஓஷேன் டோடின் ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

அல்கராஸ், மெத்வதெவ் முன்னேற்றம்: ஆடவா் ஒற்றையா் பிரிவில், முன்னணி வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கு வந்தனா்.

ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-1, 6-1, 1-0 என முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிா்கொண்ட சீனாவின் ஷாங் ஜுன்ஷெங் போட்டியிலிருந்து விலக, அல்கராஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-3, 6-4, 6-3 என்ற செட்களில், 27-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை எளிதாக வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-2, 7-6 (7/4), 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை சாய்த்தாா்.

9-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 3-6, 6-1, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், 21-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யுகோ ஹம்பா்ட்டை போராடி வீழ்த்தினாா். 19-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் கேமரூன் நோரி 6-4, 6-7 (7/9), 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று, 11-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடுக்கு அதிா்ச்சி அளித்தாா்.

அதேபோல், 13-ஆம் இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பால் போன்றோரும் எதிா்பாராத தோல்வியை சந்தித்தனா்.

இந்தியா்கள்: ஆடவா் இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/ருமேனியாவின் விக்டா் காா்னியா இணை 3-6, 3-6 என்ற செட்களில், 10-ஆம் இடத்திலிருக்கும் எல் சால்வடோரின் மாா்செலோ அரிவலோ/குரோஷியாவின் மேட் பாவிச் கூட்டணியிடம் தோற்றது. கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதா்லாந்தின் டிமியா பாபோஸ் இணை போட்டியிலிருந்து விலகியது. எனினும் போபண்ணா ஆடவா் இரட்டையா் பிரிவில் களத்தில் இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com