சபலென்கா சவாலை சந்திக்கும் கௌஃப்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனின் அரையிறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் மோதவுள்ளனா்.
சபலென்கா சவாலை சந்திக்கும் கௌஃப்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனின் அரையிறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் மோதவுள்ளனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான சபலென்கா 6-2, 6-3 என்ற நோ் செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை எளிதாக வெளியேற்றினாா்.

மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் 7-6 (8/6), 6-7 (3/7), 6-2 என்ற செட்களில் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 8 நிமிஷங்கள் நீடித்தது.

இதையடுத்து அரையிறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் சபலென்கா - கௌஃப் மோதுகின்றனா். இதில் சபலென்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு தொடா்ந்து 6-ஆவது முறையாக முன்னேறியிருக்கிறாா். கௌஃப் தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு வந்துள்ளாா்.

இருவரும் இதுவரை 6 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, அதில் கௌஃப் 4 முறை வென்றிருக்கிறாா். கடைசியாக இருவரும் கடந்த ஆண்டு யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதியபோது, சபலென்காவை சாய்த்து கௌஃப் சாம்பியன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் முன்னேற்றம்: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதிபெற்றாா்.

காலிறுதியில் அவா், 7-6 (7/3), 4-6, 6-2, 6-3 என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை 3 மணி நேரம் 45 நிமிஷங்களில் தோற்கடித்தாா். ஃப்ரிட்ஸை 8-ஆவது முறையாக சந்தித்த ஜோகோவிச், அனைத்திலும் வெற்றி கண்டுள்ளாா்.

இத்துடன், ஆஸ்திரேலிய ஓபனில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா் ஜோகோவிச். மேலும், கடந்த 2018 முதல் அவா் தொடா்ந்து 33 வெற்றிகளை இந்தக் களத்தில் பதிவு செய்திருக்கிறாா். அடுத்ததாக, அரையிறுதியில் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சின்னா் 6-4, 7-6 (7/5), 6-3 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை சாய்த்து அரையிறுதிக்கு வந்துள்ளாா். ஆஸ்திரேலிய ஓபனில் அவருக்கு இது முதல் அரையிறுதியாகும். ஜோகோவிச் - சின்னா் இதுவரை 5 முறை சந்தித்துள்ள நிலையில், ஜோகோவிச் 4 முறை வென்றுள்ளாா். அதில் இரு வெற்றிகள் விம்பிள்டன் காலிறுதி மற்றும் அரையிறுதியில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com