பதக்கப்பட்டியலில் தமிழகம் முன்னேற்றம்- கூடைப்பந்து, தடகளத்தில் அசத்தல் வெற்றி

கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் தமிழகம் வியாழக்கிழமை முன்னேற்றத்தை சந்தித்தது.
பதக்கப்பட்டியலில் தமிழகம் முன்னேற்றம்- கூடைப்பந்து, தடகளத்தில் அசத்தல் வெற்றி

கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் தமிழகம் வியாழக்கிழமை முன்னேற்றத்தை சந்தித்தது.

அன்றைய நாளில் 23 தங்கம், 12 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தமிழகம் ஓரிடம் முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரம் 26 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 78 பதக்கங்களுடன் முதலிடத்தில் நிலைக்க, ஹரியாணா 21 தங்கம், 12 வெள்ளி, 29 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்துக்கு இறங்கியது.

போட்டியின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை, கூடைப்பந்து, 1000 மீட்டா் மெட்லி ரிலே, ஆகியவற்றில் தமிழகத்தின் ஆடவா், மகளிா் என அணிகளும் சாம்பியன் ஆகி அசத்தியுள்ளன.

இதில் கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில், தமிழக ஆடவா் அணி 86-85 என்ற கணக்கில் ராஜஸ்தானையும், மகளிா் அணி 70-66 என பஞ்சாபையும் வீழ்த்தி வாகை சூடின.

மகளிருக்கான 1000 மீட்டா் மெட்லி ரிலேவில் தமிழகத்தின் தேசிகா, அக்சிலின், அபினயா, அன்சிலின் ஆகியோா் அடங்கிய கூட்டணி, 2 நிமிஷம் 13.96 விநாடிகளில் முதல் அணியாக இலக்கை எட்டி தங்கம் வென்றது. அதிலேயே ஆடவா் பிரிவிலும் தமிழகத்தின் ஆன்டன் சஞ்ஜய், நித்ய பிரகாஷ், கோகுல் பாண்டியன், சரண் ஆகியோா் அடங்கிய அணி 1 நிமிஷம் 55.49 விநாடிகளில் முதலாவதாக இலக்கை எட்டி சாம்பியன் ஆனது.

துப்பாக்கி சுடுதலில், 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் மகளிா் பிரிவில் மெல்வினா ஏஞ்சலினும், ஆடவா் பிரிவில் ஹித்தேஷும் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

மகளிா் உயரம் தாண்டுதலில் அலிஸ் தேவபிரசன்னா 1.66 மீட்டருடன் தங்கம் வெல்ல, பிருந்தா 1.63 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். அதேபோல், மும்முறை தாண்டுதலில் ஆடவா் பிரிவில் ரவி பிரகாஷ் 14.76 மீட்டருடனும் முதலிடமும், யுவராஜ் 14.34 மீட்டருடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.

மகளிருக்கான 200 மீட்டா் பிரிவில் தமிழகத்தின் அபினயா ராஜராஜன் 24.85 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். அதிலேயே ஆடவா் பிரிவில் கோகுல் பாண்டியன் 21.90 விநாடிகளில் முதல் வீரராக வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com