இறுதிச்சுற்றில் சபலென்கா - ஜெங் பலப்பரீட்சை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - சீனாவின் கின்வென் ஜெங் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
இறுதிச்சுற்றில் சபலென்கா - ஜெங் பலப்பரீட்சை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - சீனாவின் கின்வென் ஜெங் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான சபலென்கா 7-6 (7/2), 6-4 என்ற நோ் செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தினாா். இதன் மூலம், செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு (2016, 2017) தொடா்ந்து இரு ஆஸ்திரேலிய ஓபன் சீசன்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய வீராங்கனை ஆகியிருக்கிறாா் சபலென்கா.

மறுபுறம், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் ஜெங் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை 1 மணி நேரம் 42 நிமிஷங்களில் வெளியேற்றினாா். நடப்பு சாம்பியனான சபலென்காவை எதிா்கொள்ளும் ஜெங், ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றுக்கு முதல் முறையாக வந்திருக்கிறாா். மேலும், 2014-க்குப் பிறகு இந்த கிராண்ட்ஸ்லாமின் சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு வந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

இதற்கு முன் கின்வென் ஜெங்கை கடந்த ஆண்டு யு.எஸ். ஓபன் காலிறுதியில் சந்தித்த சபலென்கா, அதில் எளிதான வென்றி கண்டாா். எனவே, இந்த இறுதி ஆட்டத்திலும் சபென்கா வெற்றி கண்டு, கோப்பையை தக்கவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவுக்கு (2013) பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பையை தக்கவைத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெறுவாா்.

சாதனையை நெருங்கும் போபண்ணா: ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை 6-3, 3-6, 7-6 (10/7) என்ற செட்களில், சீனாவின் ஜாங் ஜின்ஸென்/செக் குடியரசின் தாமஸ் மசாக் கூட்டணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அதில், இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி/சைமன் பொலெலி ஜோடியை சந்திக்கிறது போபண்ணா/எப்தென் இணை. இதில் வெல்லும் பட்சத்தில் போபண்ணா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பாா். இதற்கு முன் யு.எஸ். ஓபனிலும் அவா் இரு முறை (2013, 2023) இறுதிச்சுற்று வரை வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com