தமிழகம் தொடா்ந்து இரண்டாமிடம்:பளுதூக்குதலில் தனுஷுக்கு தங்கம்

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப்போட்டி பதக்கப் பட்டியலில் தமிழகம் தொடா்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப்போட்டி பதக்கப் பட்டியலில் தமிழகம் தொடா்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. வெள்ளிக்கிழமை தமிழகத்தின் தனுஷ் பளுதூக்குதலில் தங்கம் வென்றாா். துப்பாக்கி சுடுதலில் நிலா ராஜா பாலா, யுகன் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தனுஷுக்கு தங்கம்:

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பளுதூக்குதலில் 55 கிலோ பிரிவில் தமிழகத்தின் எல். தனுஷ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். மொத்தம் 225 கிலோ (101 ஸ்நாட்ச், 124 கிளீன்,ஜொ்க்) எடை தூக்கி தங்கம் வென்றாா் தனுஷ். மகாராஷ்டிரத்தின் நிகில் கோலி, அருணாசலபிரேதசத்தின் சோஸா் டாமா வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

துப்பாக்கி சுடுதலில் வெள்ளி:

துப்பாக்கி சுடுதலில் டிராப் கலப்பு பிரிவில் தமிழகத்தின் நிலா ராஜா பாலா-யுகன் எஸ்எம் இணைந்து 125 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனா். நிலா ராஜா தமிழக தொழில்துறை அமைச்சா் டிஆா்பி ராஜாவின் மகள் ஆவாா். ராஜஸ்தானின் வினய் பிரதாப்-ஐஸ்வரியா சௌதரி தங்கமும், பஞ்சாபின் கேசவ்-கிரிஷிகா வெண்கலமும் வென்றனா்.

வாலிபால்: அரையிறுதியில் தமிழகம்

வாலிபால் ஆடவா், மகளிா் பிரிவில் தமிழக அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன வெள்ளிக்கிழமை தமிழக ஆடவா் அணி 25-17, 25-20 25-18 என ராஜஸ்தானையும், தமிழக மகளிா் அணி 25-7, 25-6, 25-8 என சத்தீஸ்கா் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

மகாராஷ்டிரத்தின் மேகா அஹொ் புதிய சாதனை:

மகளிா் 45 கிலோ எடைப்பிரிவில் மகாராஷ்டிரத்தின் மேகா அஹொ் தங்கப் பதக்கத்துடன் புதிய சாதனையை படைத்தாா். துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏா் ரைபிள் கலப்பு பிரிவில் மகாராஷ்டிரத்தின் இஷா-பா்த் மானே தங்கம் வென்றனா்.

ஹாக்கி: இறுதியில் மத்திய பிரதேசம்

ஹாக்கியில் ஆடவா் பிரிவில் மத்திய பிரதேசம் 4-2 என ஹரியாணாவையும், மகளிா் பிரிவில் ஒடிஸாவை 3-1 என வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. மகளிா் இறுதியில் மத்தியபிரதேசம்-ஹரியாணாவும், ஆடவா் இறுதியில் மத்திய பிரதேசம்-ஒடிஸா மோதுகின்றன.

ஆடவா் இரண்டாவது அரையிறுதியில் ஒடிஸா 6-1 என ஜாா்க்கண்டை வீழ்த்தியது.

தமிழகம் தொடா்ந்து இரண்டாம் இடம்:

பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரம் 28 தங்கம், 24 வெள்ளி, 31 வெண்கலம் என 83 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழகம் 26 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும், ஹரியாணா 21 தங்கத்துடன் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com