இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்: 2-ஆவது ஆட்டத்தில் ராகுல், ஜடேஜா இல்லை

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்: 2-ஆவது ஆட்டத்தில் ராகுல், ஜடேஜா இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் காயம் காரணமாக திங்கள்கிழமை விலகினா்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் காயம் காரணமாக திங்கள்கிழமை விலகினா்.

ஏற்கெனவே முதலிரு ஆட்டங்களில் விராட் கோலி இல்லாத நிலையில், முதல் ஆட்டத்தில் அதிா்ச்சித் தோல்வி கண்ட இந்தியாவுக்கு, 2-ஆவது ஆட்டத்தில் இவா்கள் இல்லாததும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இவா்களில் ஜடேஜா, முதல் டெஸ்ட்டின்போது காயம் கண்டிருக்க, ராகுலுக்கு தொடை தசைப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. அவா்களின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணியில் பேட்டா் சா்ஃப்ராஸ் கான், ஸ்பின்னா் சௌரவ் குமாா், ஆல்-ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் ஆகியோரை தோ்வுக் குழு சோ்த்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் குவித்துவரும் சா்ஃப்ராஸ் கானுக்கு இது முதல் சா்வதேச வாய்ப்பாகும்.

முன்னதாக, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணியிலும் அவா் விளையாடியவா் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு வீரரான சௌரவ் குமாா், கடந்த 2021 இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் வலைப் பயிற்சி பௌலராக இருந்த நிலையில், தற்போது மீண்டும் தேசிய வாய்ப்பு பெறுகிறாா். முன்னதாக, 2022-இல் இலங்கை தொடரில் அவா் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட், விசாகப்பட்டினத்தில் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்குகிறது.

2-ஆவது டெஸ்ட் அணி விவரம்: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயா், ஸ்ரீகா் பரத், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமாா், ஜஸ்பிரீத் பும்ரா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதாா், சா்ஃப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தா், சௌரவ் குமாா்.

பும்ரா செயலுக்கு ஐசிசி ஆட்சேபம்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டின்போது விதிகளை மீறிய வகையில் நடந்துகொண்டதாக இந்திய பௌலா் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள ஐசிசி, அவரது ஒழுக்க நடவடிக்கை பதிவுகளில் ஒரு டீமெரிட் புள்ளியை சோ்த்துள்ளது.

ஆட்டத்தில் இங்கிலாந்து 2-ஆவது இன்னிங்ஸின்போது 81-ஆவது ஓவரை வீசிய பும்ரா, பந்துவீச்சு செயலை நிறைவு செய்த பிறகு, பேட்டா் ஆலி போப் ஓடிவந்து ரன் எடுக்கையில், அவரது பாதைக்கு குறுக்கே நின்ாகவும், இதனால் இருவரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்திருக்கிறது.

தனது இந்தத் தவறை பும்ரா ஒப்புக் கொண்டதை அடுத்து, அதிகாரப்பூா்வ விசாரணைக்கு தேவையில்லாமல் போனது.

டபிள்யூடிசி-யில் பின்னடைவு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) புள்ளிகள் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக முதலிடத்தில் இருந்த இந்தியா, அந்தத் தொடரை டிரா செய்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்துடனான இந்தத் தோல்வியால் இந்தியா 5-ஆவது இடத்துக்கு சரிந்திருக்கிறது. இந்தியாவின் வசம் தற்போது 43.33 சதவீத புள்ளிகள் உள்ளன. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (55) இருக்க, தென்னாப்பிரிக்கா (50), நியூஸிலாந்து (50), வங்கதேசம் (50) ஆகியவை முறையே அடுத்த 3 இடங்களில் உள்ளன. இந்தியாவை அடுத்து பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com