இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் (42) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர்

புது தில்லி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் (42) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் திராவிட் விடைபெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்டர்களான கெளதம் கம்பீர், டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் அந்தப் பொறுப்புக்கான நேர்காணலில் பங்கேற்றனர்.

எனினும், கெளதம் கம்பீரே அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவார் என ஏற்கெனவே உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தனது "எக்ஸ்' கணக்கில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நவீன கால கிரிக்கெட் விளையாட்டு மிக வேகமாக மாற்றம் பெற்று வரும் நிலையில், கம்பீர் அதை மிக நெருக்கமாக கவனித்து வருபவர்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளில் அனுபவம் பெற்றிருக்கும் கம்பீர், இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமானவராக இருப்பார் என நம்புகிறேன்.

இந்திய அணிக்கான அவரது தெளிவான பார்வையும், அனுபவமும் இந்தப் பொறுப்புக்கு ஏற்றவராக அவரைத் தேர்வு செய்ய வைத்துள்ளது. அவரது புதிய பயணத்துக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும்' என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பீர் தனது "எக்ஸ்' கணக்கில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்தியா எனது அடையாளம். எனது நாட்டுக்காக பணியாற்றுவது மிகச் சிறந்த கெளரவமாகும். ஒரு பயிற்சியாளராக, மீண்டும் இந்திய அணியில் இணைவதற்காக பெருமை கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்வதே எனது இலக்காகும். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை இந்திய அணி வீரர்கள் தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். அதை நிஜமாக்குவதற்காக எனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வேன்' என்று கூறியுள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றில் சாம்பியனான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கம்பீர், இந்தியாவுக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.

கொல்கத்தா அணியின் ஆலோசகராக கம்பீர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் 2012, 2014, 2024 என 3 முறை அந்த அணி ஐபிஎல் சாம்பியனாகியிருக்கிறது.

இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தனது பணியை தொடங்க இருக்கிறார்.

முன்னதாக ராகுல் திராவிட் 2021 நவம்பர் முதல் 2024 ஜூன் வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த நிலையில், அவர் வழிகாட்டுதலில் இந்தியா சமீபத்தில் டி20 உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com