காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
Mark J. Terrill

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவர் 6-2, 6-3 என, 31-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமேவை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் அவர், இத்தாலியின் ஃபாபியான் மரோஸானை சந்திக்கிறார்.

3-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-4 என்ற செட்களில், 25-ஆம் இடத்திலிருந்த ஜெர்மனியின் ஜான் லெனார்டை வெளியேற்றினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதுகிறார்.

அதிர்ச்சி: இதனிடையே, 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 4-6, 4-6 என்ற கணக்கில், 32-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜெரி லெஹெக்காவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். லெஹெக்கா அடுத்ததாக, கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் சவாலை சந்திக்கிறார்.

6-ஆம் இடத்திலிருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 7-6 (7/9), 6-3 என, நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை சாய்த்தார். அடுத்து ஸ்வெரெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் மினார் முன்னதாக, 7-5, 6-0 என கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக்கை வென்றார்.

கெர்பர், வோஸ்னியாக்கி முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில், ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பர் 6-4, 7-5 என்ற செட்களில், 17-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளார். அதில் அவர், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியுடன் மோதுகிறார்.

வோஸ்னியாக்கி முந்தைய சுற்றில், 6-2, 4-6, 6-0 என அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸை சாய்த்தார். 12-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா 6-2, 4-6, 3-6 என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவிடம் வெற்றியை இழந்தார்.

அனஸ்தாசியா அடுத்ததாக, உக்ரைனின் மார்தா கொஸ்டியுக்குடன் மோதுகிறார். 18-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸைம் 4-6, 1-6 என்ற கணக்கில், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். புடின்சேவா அடுத்த சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.

13-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாவ் பாலினி 6-3, 3-6, 6-4 என, 21-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவையும், ரஷியாவின் அனா பொடாபோவா 6-1, 6-1 என ஆர்ஜென்டீனாவின் நாடியா பொடோரோஸ்காவையும் வீழ்த்தினர்.

போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் கூட்டணி முதல் சுற்றிலேயே 6-7 (1/7), 6-4, 8-10 என்ற செட்களில் பெல்ஜியத்தின் ஜோரான் வெலிகன்/சாண்டர் கில்லே இணையிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com