ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார் நார்டி

ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார் நார்டி

இண்டியன் வெல்ஸ்: ஆயிரம் ரேங்கிங் புள்ளிகள் கொண்ட ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியான இண்டின் வெல்ஸ் ஓபன் டென்னிஸில், உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், முதல் சுற்று "பை' பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் கண்ட அவர், அதில் 4-6, 6-3, 3-6 என்ற செட்களில், இத்தாலியின் லூகா நார்டியிடம் வீழ்ந்தார். உலகத் தரவரிசையில் நார்டி 123-ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் அல்லது மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச்சை வீழ்த்திய மிகக் குறைந்த ரேங்கிங் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன், 2008-இல் மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 122-ஆவது இடத்தில் இருந்தபோது ஜோகோவிச்சை தோற்கடித்திருந்தார்.

முன்னதாக, தகுதிச்சுற்றிலேயே வெளியேறும் நிலையில் இருந்த நார்டி, ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு அவர் விலகியதை அடுத்து பிரதான சுற்று வாய்ப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜோகோவிச்சை வீழ்த்தியிருக்கும் அவர், அடுத்து அமெரிக்காவின் டாமி பாலை சந்திக்கிறார்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-4, 5-7, 6-3 என்ற செட்களில், 29-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தினார். அடுத்ததாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார் மெத்வதெவ்.

13-ஆம் இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் முந்தைய சுற்றில், 6-3, 6-3 என்ற செட்களில், 21-ஆவது இடத்திலிருந்த பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை வெளியேற்றினார். 12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் 6-2, 6-2 என, 19-ஆம் இடத்திலிருந்த ஆர்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸை எளிதாக சாய்த்தார்.

அடுத்து ஃப்ரிட்ஸ், டென்மார்க்கின் ஹோல்கர் ரூனுடன் மோதுகிறார். 7-ஆம் இடத்திலிருக்கும் ரூன் 6-2, 7-6 (7/5) என, 26-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்úஸா முசெட்டியை வீழ்த்தினார். 9-ஆம் இடத்திலிருக்கும் நார்வேயின் கேஸ்பர் ரூட் 6-2, 6-4 என பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸையும், 17-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-4, 6-4 என, 14-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யுகோ ஹம்பர்ட்டையும் வெளியேற்றினர்.

ரடுகானுவை சாய்த்தார் சபலென்கா

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவ சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற செட்களில், பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானுவை வென்றார். சபலென்கா அடுத்ததாக, அமெரிக்காவின் எம்மா நவாரோவை எதிர்கொள்கிறார்.

23-ஆம் இடத்திலிருக்கும் நவாரோ முன்னதாக, 6-1, 4-6, 6-3 என, 16-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை தோற்கடித்தார். 9-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரி 6-3, 6-4 என, 20-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் கரோலின் கார்சியாவை வீழ்த்தினார்.

11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வெளியேற்றினார். மகப்பேறு ஓய்வுக்குப் பிறகு முதல் போட்டியில் களம் கண்ட ஜப்பானின் நவோமி ஒசாகா, 5-7, 4-6 என்ற செட்களில், 24-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்சிடம் தோல்வியடைந்தார்.

மெர்டன்ஸ் அடுத்ததாக, அமெரிக்காவின் கோகோ கெளஃபுடன் மோதுகிறார். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கெளஃப் முந்தைய ஆட்டத்தில் 6-2, 7-6 (7/5) என்ற கணக்கில் இத்தாலியின் லூசியா புரான்ùஸட்டியை சாய்த்தார். பிரான்ஸின் டியேன் பெரி 6-4, 6-3 என ரஷியாவின் அனா பிளிங்கோவாவை தோற்கடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com