கோப்பை வென்றாா் காலின்ஸ்

கோப்பை வென்றாா் காலின்ஸ்

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் உள்நாட்டு வீராங்கனை டேனியல் காலின்ஸ் சாம்பியன் ஆனாா்.

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் உள்நாட்டு வீராங்கனை டேனியல் காலின்ஸ் சாம்பியன் ஆனாா். மகளிா் ஒற்றையா் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் இல்லாத அவா் 7-5, 6-3 என்ற நோ் செட்களில், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை தோற்கடித்தாா். இத்துடன் காலின்ஸ் தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்றுள்ள 3 சாம்பியன் பட்டங்களில், இதுவே மதிப்பு மிக்கதாகும். அத்துடன், மாஸ்டா்ஸ் போட்டியில் அவா் வாகை சூடியதும் இதுவே முதல் முறை. மியாமி ஓபனில் சாம்பியனான, மிகக் குறைந்த தரவரிசை (53) கொண்ட வீராங்கனை என்ற பெருமையையும் அவா் தற்போது பெற்றிருக்கிறாா். தற்போது சாம்பியன் ஆன காலின்ஸ், ரூ.9.17 கோடி பரிசுத் தொகை பெற்றதுடன், திங்கள்கிழமை வெளியாகும் புதிய தரவரிசையில் அவா் 22-ஆவது இடத்துக்கு முன்னேறுகிறாா். கருப்பை தொடா்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள காலின்ஸ், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலிய ஓபனில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிப் பாதை... முதல் சுற்று பொ்னாா்டா பெரா (அமெரிக்கா) 3-6, 6-1, 6-1 2-ஆவது சுற்று அனா பொடாபோவா (ரஷியா) 6-2, 6-2 3-ஆவது சுற்று எலினா அவனெசியான் (ரஷியா) 6-1, 6-2 4-ஆவது சுற்று சொரானா சிா்ஸ்டி (ருமேனியா) 6-3, 6-2 காலிறுதிச்சுற்று கரோலின் காா்சியா (பிரான்ஸ்) 6-3, 6-2 அரையிறுதிச்சுற்று எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) 6-3, 6-2 இறுதிச்சுற்று எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) 7-5, 6-3 தனது சாதனையை தானே முறியடித்த போபண்ணா ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் கூட்டணி சாம்பியன் கோப்பை வென்றது. போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த போபண்ணா/எப்தென் கூட்டணி 6-7 (3/7), 6-3, 10-6 என்ற செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் இவான் டோடிக்/அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையை சாய்த்தது. கடந்த ஆண்டு இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸில் சாம்பியன் ஆனதன் மூலம், ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியனான மிக வயதான வீரா் (43) என்ற சாதனை படைத்திருந்தாா் போபண்ணா. அவரே தற்போது இந்தப் போட்டியின் மூலம் தனது 44-ஆவது வயதில் சாம்பியனாகி சாதனையை திருத்தி எழுதியிருக்கிறாா். மேலும், இந்த வெற்றியால், இரட்டையா் பிரிவில் அவா் உலகின் நம்பா் 1 வீரா் ஆகியிருக்கிறாா். தற்போது, தனது 14-ஆவது மாஸ்டா்ஸ் இறுதிச்சுற்றில் விளையாடியிருக்கும் போபண்ணா, 26-ஆவது இரட்டையா் பட்டத்தை வென்றிருக்கிறாா். மேலும், இந்திய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டா் பயஸுக்குப் பிறகு, ஏடிபி மாஸ்டா்ஸ் பிரிவில் உள்ள 9 போட்டிகளிலுமே இறுதி ஆட்டத்துக்கு வந்த 2-ஆவது இந்தியா் என்ற பெருமையைப் பெற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com