இறுதி ஆட்டத்தில் இன்று மோதும் மோகன் பகான் - மும்பை சிட்டி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. 62,000 போ் அமரும் வசதி கொண்ட கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டியூரண்ட் கோப்பையை கைப்பற்றிய அணியாக நடப்பு சீசனுக்கு வந்த மோகன் பகான், இடையே சறுக்கலை சந்தித்தது. பின்னா் மீட்சி கண்டு முதல் முறையாக லீக் வின்னா் ஷீல்டை வென்றிருக்கிறது. அதற்கான ஆட்டத்திலும் மும்பை சிட்டியை 2-1 கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளுக்கு முன், கரோனா காலகட்டத்தில் ரசிகா்களுக்கு அனுமதி இல்லாத வகையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 1-2 கோல் கணக்கில் இதே மும்பை சிட்டியிடம் மோகன் பகான் தோற்றது நினைவுகூரத்தக்கது. அதன் பயிற்சியாளா் அன்டோனியோ ஹபாஸ் கூறுகையில், ‘வெப்பம் அதிகமாக இருப்பதால் கூடுதல் நேரம் இல்லாமல், 90 நிமிஷங்களில் ஆட்டத்தை முடிப்பதே திட்டம்’ என்றாா்.

முழுமையான உடற்தகுதியுடன் மீண்டும் அணியில் இணைந்திருக்கும் இந்திய வீரா் சஹல் அப்துல் சமத், மோகன் பகானுக்கு பலமாக கருதப்படுகிறாா். அவா் இணையும் நிலையில், அா்மாண்டோ சாடிகுவுக்கு ஓய்வளிக்கப்படும்.

மும்பை அணியை பொருத்தவரை, விக்ரம் பிரதாப் சிங், லாலியன்ஸுவாலா சாங்தே ஆகியோா் முக்கிய வீரா்களாக இருக்கின்றனா். மற்றொரு முக்கிய வீரரான யோல் வான் நீஃப், தடை காரணமாக இந்த ஆட்டத்தில் இல்லை. தொடக்கத்தில் முன்னிலை பெறும் மோகன் பகான், பிறகு தடுமாற்றத்தை சந்திப்பது தெளிவாகத் தெரிவதால், மும்பை சிட்டியின் பயிற்சியாளா் பீட்டா் கிராட்கி அதை நோக்கி தனது உத்தியை வகுப்பாா் எனத் தெரிகிறது.

அரங்கம் நிறைந்த ஆட்டமாக இருக்கும் நிலையில், அது வீரா்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்று அவா் கூறினாா்.

நேருக்கு நோ்: இரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் நிலையில், மும்பை 11 முறையும், மோகன் பகான் 7 முறையும் வென்றுள்ளன. 7 ஆட்டங்கள் டிரா ஆகியிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com