லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

டெல்லியின் அபார வெற்றி; லக்னெள அணியை 19 ரன்களில் வீழ்த்தியது
லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

புது தில்லி, மே 14: ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் டெல்லி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுக்க, லக்னெள 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களே சேர்த்தது.

இந்த ஆட்டத்தின் முடிவு ஏற்படுத்திய தாக்கத்தால், ராஜஸ்தான் 2-ஆவது அணியாக பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

வெற்றியுடன் லீக் சுற்றின் 14 ஆட்டங்களையும் முதல் அணியாக நிறைவு செய்த டெல்லி, பிளே-ஆஃப் வாய்ப்புக்காக அதிருஷ்டத்தை நம்பி காத்திருக்கிறது. லக்னெள போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னெள, பந்துவீசத் தீர்மானித்தது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கியோரில் அதிரடி வீரர் ஜேக் ஃப்ரேசர், 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அபிஷேக் பொரெல் அதிரடியாக ரன்கள் சேர்க்க, ஒன் டவுனாக வந்த ஷாய் ஹோப் அவருடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 2-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து பிரிந்தது இந்தக் கூட்டணி. 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 38 ரன்கள் விளாசி, ஹோப் விக்கெட்டை இழந்தார்.

4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ரிஷப் பந்த், தனது பங்குக்கு சற்று அதிரடி காட்ட, மறுபுறம் அபிஷேக் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆடவர, பந்த் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார்.

ஓவர்கள் முடிவில் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 57, அக்ஸர் படேல் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னெள தரப்பில் நவீன் உல் ஹக் 2, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 209 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னெள அணியில், கேப்டன் கே.எல்.ராகுல் 5, குவின்டன் டி காக் 2 பவுண்டரிகளுடன் 12, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 5, தீபக் ஹூடா 0, ஆயுஷ் பதோனி 6 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

மறுபுறம், மிடில் ஆர்டரில் வந்த நிகோலஸ் பூரன் அதிரடியாக ரன்கள் குவித்தார். 27 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் விளாசி வீழ்ந்தார் அவர். கிருணால் பாண்டியா 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யுத்விர் சிங் 1 பவுண்டரி,

1 சிக்ஸருடன் 14, ரவி பிஷ்னோய் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

ஓவர்கள் முடிவில் கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 58, நவீன் உல் ஹக் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பெளலர்களில் இஷாந்த் சர்மா 3, கலீல் அகமது, அக்ஸர் படேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், டிரிஸ்டன்

ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

புள்ளிகள் பட்டியல்

டெல்லி - லக்னௌ ஆட்டம் (64) வரை

கொல்கத்தா 13 9 3 19 1.428

ராஜஸ்தான் 12 8 4 16 0.349

சென்னை 13 7 6 14 0.528

ஹைதராபாத் 12 7 5 14 0.406

டெல்லி 14 7 7 14 -0.377

பெங்களூரு 13 6 7 12 0.387

லக்னௌ 13 6 7 12 -0.787

குஜராத் 13 5 8 11 -1.063

மும்பை 13 4 9 8 -0.271

பஞ்சாப் 12 4 8 8 -0.423

இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் - பஞ்சாப்

இரவு 7.30 மணி / குவாஹாட்டி

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com