அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அரையிறுதிச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அவர், 6-1, 6-3 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் மேடிசன் கீஸை சாய்த்தார். இதர ஆட்டங்களில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 4-6, 6-1, 7-6 (9/7) என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை போராடி வீழ்த்தினார்.

காலிறுதியில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவுடன் மோதுகிறார் சபலென்கா. போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரி 4-6, 1-6 என்ற கணக்கில், 24-ஆம் இடத்திலிருக்கும் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். அஸரென்கா அடுத்த சுற்றில், அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை சந்திக்கிறார்.

போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் காலின்ஸ், 6-0, 6-3 என்ற செட்களில் ருமேனியாவின் இரினா பெகுவை வெளியேற்றினார்.

மெத்வதெவ் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 7-6 (7/5), 2-5, 7-5 என்ற செட்களில் செர்பயாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளார்.

அதில் அவர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார். போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் டாமி பால், 6-4, 6-3 என்ற கணக்கில் ஜெர்மனியின் டேவிட் கோப்ஃபரை சாய்த்து முன்னேற்றம் கண்டிருக்கிறார். 7-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் ஹியுபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (9/7), 6-2 என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை வெளியேற்றினார். அடுத்து அவர், மற்றொரு ஆர்ஜென்டீன வீரரான செபாஸ்டியன் பேஸýடன் விளையாடுகிறார். 17-ஆம் இடத்திலிருக்கும் பேஸ் முந்தைய சுற்றில் 2-6, 6-2, 6-3 என்ற செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை போராடி வீழ்த்தி அசத்தினார்.

11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் 6-2, 6-7 (11/13), 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சாய்த்தார்.

போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் கூட்டணி 2-6, 4-6 என்ற செட்களில் இத்தாலியின் சைமன் பொலெலி/ஆண்ட்ரியா வவாசோரி இணையிடம் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com