தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

கோப்: ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் டி.மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

போட்டியின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, உயரம் தாண்டுதலில் (டி63) மாரியப்பன் சிறந்த முயற்சியாக 1.88 மீட்டரை தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின் எஸ்ரா ஃபிரெச் 1.85 மீட்டருடன் வெள்ளியும், சக நாட்டவரான சாம் கிரெவெ 1.82 மீட்டருடன் வெண்கலமும் பெற்றனர்.

கடந்த 8 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் மாரியப்பன் வென்றிருக்கும் முதல் தங்கம் இதுவாகும். முன்னதாக, 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் (டி42) வென்றிருந்த அவர், 2021 டோக்கியோ பாராலிம்பிக்கிலும், கடந்த ஆண்டு ஹாங்ஸýவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் (டி63) பெற்றிருந்தார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் அவர் எட்டிய 1.89 மீ உயரமே, அவரது "பெஸ்ட்' ஆகும்.

டி63 பிரிவில், முழங்கால் பகுதிக்கு கீழே வளர்ச்சி குறைபாடு அல்லது மாற்றுத்திறனாளியாக இருப்போர் பங்கேற்கின்றனர். 5 வயது வரை இயல்பான நிலையில் இருந்த மாரியப்பன், அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் வலது முழங்காலுக்கு கீழ் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆனார்.

தங்கத்தை தக்கவைத்த சுமித்: ஆடவர் ஈட்டி எறிதலில் (எஃப்64) நடப்பு சாம்பியனான சுமித் அன்டில் சிறந்த முயற்சியாக 69.50 மீட்டர் தொலைவுக்கு எறிந்து முதலிடம் பிடித்து தங்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் 60.41 மீட்டருடன் வெண்கலப் பதக்கம் பெற்றார். இலங்கையின் துலன் கொடிதுவக்கு 66.49 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

நடப்பு பாராலிம்பிக் சாம்பியனாகவும் இருக்கும் சுமித், கடந்த ஆண்டு ஹாங்ஸý பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 73.29 மீட்டர் எறிந்ததே இன்றளவும் உலக சாதனையாகத் தொடர்கிறது. அதேபோல், இந்த உலக சாம்பியன்ஷிப்பில் கடந்த ஆண்டு அவர் எட்டிய 70.83 மீட்டரே போட்டி சாதனையாகவும் நீடிக்கிறது.

ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த அன்டில், மல்யுத்த வீரராக விரும்பியிருக்கிறார். எனினும், 2015-ஆம் ஆண்டு தனது 17-ஆவது வயதில் சாலை விபத்து ஒன்றில் இடது கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியானார்.

கிளப் த்ரோவில் இரு பதக்கம்: மகளிருக்கான கிளப் த்ரோ (எஃப்51) விளையாட்டில், இந்தியாவின் எக்தா பியான் சீசன் பெஸ்ட் முயற்சியாக 20.12 மீட்டருக்கு எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அதிலேயே மற்றொரு இந்தியரான கஷிஷ் லக்ரா 14.56 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

எக்தா பியான் கடந்த ஆண்டு ஹாங்ஸý பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலமும், 2018 ஜகார்த்தா பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும் வென்றவராவார். மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்பிய எக்தா, கடந்த 2003-இல் சாலை விபத்தை சந்தித்து முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியிலிருந்து செயல்படும் மாற்றுத்திறனாளி ஆனார். தற்போது ஹரியாணா அரசு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

3-ஆம் இடம்

போட்டியின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் இந்தியா, 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. சீனா 41 பதக்கங்களுடன் (15/13/13) முதலிடத்திலும், பிரேஸில் 25 பதக்கங்களுடன் (14/6/5) இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com