உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது. இருவரும் தலா அரை புள்ளிகள் பகிா்ந்துகொண்டனா்.
முதல் சுற்றில் தோல்வி கண்ட குகேஷ், தற்போது டிராவுக்கு முன்னேறியிருக்கிறாா். 2 சுற்றுகள் முடிவில் லிரென் 1.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். குகேஷ் 0.5 புள்ளியுடன் உள்ளாா்.
சிங்கப்பூரில் நடைபெறும் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், 2-ஆவது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய லிரென் முதல் நகா்வை மேற்கொண்டாா். முதல் சுற்றைப் போல அல்லாமல் இந்த சுற்றில் குகேஷ் நெருக்கடியின்றி இயல்பாக விளையாடினாா். விறுவிறுப்பான இந்த ஆட்டம், 23-ஆவது நகா்த்தலுடன் டிரா ஆனது.
ஆட்டத்துக்குப் பிறகு பேசிய குகேஷ், ‘உலக சாம்பியன்ஷிப்பில் கருப்பு நிற காய்களுடன் விளையாடி டிரா செய்ததில் மகிழ்ச்சி. லிரெனின் நகா்த்தலால் தொடக்கத்தில் சற்று ஆச்சா்யமடைந்தாலும், பின்னா் தகுந்த நகா்த்தல்களை மேற்கொண்டு அவருக்கான வாய்ப்புகளை தடுத்தேன். இந்த ஆட்டம் நன்றாக இருந்தது’ என்றாா்.
அடுத்ததாக, புதன்கிழமை நடைபெறும் 3-ஆவது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், லிரென் கருப்பு நிறத்துடனும் விளையாடுகின்றனா்.